சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – வங்கதேசம் மோதல்
8-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த தொடர் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். லீக் ஆட்டங்கள் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுள்ளது.
13-ம் தேதி ஓய்வு நாளாகும். 14-ம் தேதி தேதி கார்டிப் நகரில் முதல் அரை இறுதி ஆட்டமும், 15-ம் தேதி பர்மிங்காமில் 2-வது அரை இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டம் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மறுநாள் (19-ம் தேதி) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வங்கதேச அணியுடன் மோதுகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முதல் முறையாக தமிழில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானலில் இந்த தொடரின் அனைத்து ஆட்டங் களையும் தமிழ் வர்ணணையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை இங்கிலாந்து அணி 3-வது முறையாக நடத்துகிறது. கடந்த 2004, 2013-ம் ஆண்டுகளில் தொடரை நடத்திய போது இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.
இந்த இரு தொடர்களிலும் அந்த அணி மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இம்முறை இங்கிலாந்து அணி அதீத பலத் துடன் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
வங்கதேச அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 2015 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி யிருந்தது. இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.
கடந்த இரு ஆண்டுகளாகவே வங்கதேச அணி, குறுகிய வடிவி லான போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகக் கோப்பைக்கு பிறகு அந்த அணி 4 ஒருநாள் போட்டி தொடர்களை வென்றுள்ளது. இவற்றில் மூன்று இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிரானவை ஆகும்.
வெளிநாட்டு தொடர்களிலும் சமீபகாலமாக வங்கதேச வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த போதிலும் வங்கதேச அணி நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் 341 ரன்கள் குவித்த வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்களில் சுருண்டிருந்தது.
இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துகள் நன்கு ஸ்விங் ஆகும். மேலும் தட்பவெப்ப நிலை காரணமாக ஆடுகளத்தின் தன்மை அவ்வவ்போது மாறக்கூடும். மேலும் அங்கு ஜூன் மாதம் நடைபெறும் போட்டிகளில் பந்துகள் வழக்கத் துக்கு மாறாக அதிக அளவில் ஸ்விங் ஆகும். சமீபத்தில் இங்கி லாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டியில் இதை கண்கூடாக காண முடிந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை தாரை வார்த்திருந்தது. இந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை மணியாகவே அமைந் தது. 42 ஆண்டுகளாக பெரிய அளவி லான தொடர்களில் கோப்பை வெல்ல முடியாமல் தவிக்கும் இங்கிலாந்து அணி இம்முறை மிகுந்த கவனத்துடன் விளையாடக்கூடும்.
பரிசுத் தொகை
சாம்பியன்ஸ் டிராபிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.28.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசளிக்கப்படும். 2-ம் இடம் பெறும் அணிக்கு ரூ.7 கோடி கிடைக்கும். அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.2.8 கோடி பரிசளிக்கப்படும். லீக் சுற்றில் 3-வது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 57 லட்சம் வழங்கப்பட உள்ளது.