மது பார்களுக்கு மீண்டும் அனுமதி: வருவாயை பெருக்க கேரளா திட்டம்
கேரளாவில், மாநில அரசின் வருவாய் மற்றும் சுற்றுலாத்துறையை பாதிக்காத வகையில், புதிய மதுக்கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு ஈடுபட்டு உள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், இடதுசாரி முன்னணி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இதற்கு முன் ஆட்சி செய்த, காங்., முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, கேரளா முழுவதும், மது விற்பனையில் பல கெடுபிடிகளை அமல்படுத்தியது.மாநில மக்கள் நலன் கருதி, நான்கு நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களில், பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
இதன் மூலம், மாநிலம் முழுவதும், 700க்கும் மேற்பட்ட பார்கள் மூடப்பட்டன. அதே போல், பீர், ஒயின்களை தவிர, பிற மது விற்பனைக்கும் கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டன.முந்தைய அரசின் மதுக் கொள்கையால், கேரளாவில், சுற்றுலாப் பயணியரின் வருகை பெருமளவு குறைந்துள்ளதாக, தற்போதைய மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே போல், மாநில வருவாயில், 7,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அரசின் வருவாயை பாதிக்காத வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையிலும், புதிய மதுக் கொள்கையை அமல்படுத்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மாநில கலால் வரித்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:முந்தைய அரசின் மதுக் கொள்கையால், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால், மதுவால் கிடைக்கும் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது.
எனவே, சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளை மீறாமல், புதிய மதுக் கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடுமையான விதிகளின் அடிப்படையில், பார்களை திறக்க மீண்டும் அனுமதி அளிப்பது, முக்கிய சுற்றுலா பகுதிகளில், மது விற்பனைக்கு அனுமதி அளிப்பது போன்ற சில புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.