பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப்
பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பல ஆயிரம் பேர் வேலையிழக்க போவதாக பேசப்படுகிறது
கடந்த 2015ம் ஆண்டு பாரிஸில் 196 நாடுகளின் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு நடந்தது. இந்த கூட்டத்தில் பருவ நிலை மாற்றம் குறித்து விவாதித்து கரியமில வாயு வெறியேற்றத்தை முடிந்த அளவு குறைப்பது குறித்து ஒர் ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.
அதாவது பொருளாதார முன்னேற்றத்தை காரணம்காட்டி சூழலை கெடுக்கும் வகையில் செயல்படும் தொழிற்சாலைகளை வரன்முறைபடுத்த வேண்டும். உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டே தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும். உள்ளிட்ட முக்கிய முடிவுகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. அமெரிக்காவும் சீனாவும் தான் உலகிலேயே அதிக அளவு கரியமிலத்தை வெளியிடுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த ஒப்பந்தம் குறித்து அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். காரியமில வெளியேற்றத்தால் உலகிற்கு பாதிப்பில்லை எனவும், இது அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்க சீனா செய்த சதி என்ற கருத்தும் பரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் டிரம்ப் தற்போது பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
பூமி வெப்பம் அதிகரிக்கும்
ஆனால் கரியமில வாயு வெளியேற்றத்தால் பூமியின் சூடு மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் இதனால் பெரும் நிலபரப்பு பாலைவனமாகும் எனவும், சில தீவுகள் காணமல் போகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலை பறிபோகும்
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் நிலக்கரி பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது சூரிய சக்தி, காஸ் உள்ளிட்டைவை மூலமாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் பெரும்அளவு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த துறைகளில் வேலை செய்பவர்கள் பல ஆயிரம் பேர் வேலையிழக்க அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
உலக வணிக தலைவர்கள் எதிர்ப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுக்க போவதாக முன்னதாக செய்திகள் வரத்துவங்கியவுடனே கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெரும் நிறுவனங்கள் குறிப்பாக பெரும்பாலான பெட்ரோலிய நிறுவனங்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அவர்கள் அமெரிக்கா தொடர்ந்து பாரிஸ் பருவநிலை ஒப்பந்ததில் தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
பொருளாதாரம் பாதிப்பு
டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பல முக்கிய நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதிப்பு உலகில் உள்ள முக்கிய பங்குசந்தைகளில் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் சில காலங்களுக்கு பொருளாதார மந்த நிலை ஏற்படவும் வாயப்பிருப்பதாக பங்குசந்தை வல்லுநர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.