தென் ஆப்ரிக்கா – இலங்கை இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா – இலங்கை அணிகள் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.
ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு அணிகளுக்கு எதிரான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை வென்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த மண்ணில் இலங்கை அணியை 5-0 என ஒயிட்வாஷ் செய்திருந்தது.
இலங்கை அணியை மட்டும் அல்ல ஆஸ்திரேலிய அணியையும் தென் ஆப்ரிக்க அணி ஒயிட்வாஷ் செய்து 5-0 என தொடரை கைப்பற்றியிருந்தது. ஐசிசி நடத்தும் தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை மட்டுமே வென்றுள்ளது.
கடந்த 1998-ல் அந்த அணி பட்டம் வென்றிருந்தது. 19 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. சமீபத்திய ஐசிசி தரவரிசை பட்டியலில் பேட்டிங்கில் முதலிடத்தை டி வில்லியர்ஸூம், பந்து வீச்சில் முதல் இடத்தை பிடித்த ரபாடாவும் அசத்த காத்திருக்கின்றனர்.
டி வில்லியர்ஸ் கூறும்போது, “நம்பர் ஒன் அணியாக இந்த தொடரில் விளையாடுகிறோம். ஒரு சில காரணங்களால் நம்பிக்கையுடன் தொடரை அணுகிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழந்த நாங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெற்றி பெறுவதற்கு ஒருபடி முன்னேறி செல்ல வேண்டும்” என்றார்.
தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு இந்த ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவை அதிகம் நம்பி உள்ளது. கணுக்கால் காயம் காரணமாக மலிங்கா கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.
சுமார் 18 மாத இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. யார்க்கர் மன்னனாக கருதப்படும் அவரது வருகை இலங்கை அணிக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறும்போது, “மலிங்கா எங்கள் அணிக்கு பல வருடங்களாக முன்னணி பந்து வீச்சாளராக இருந்துள்ளார். அவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவதை காண நாங்கள் ஆவலுடன் உள்ளோம்” என்றார்.
மேத்யூஸ் கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் மேத்யூஸ் கலந்து கொள்ளவில்லை.
இன்று காலை நடைபெறும் உடல் தகுதி தேர்வில் மேத்யூஸ் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியுடனான ஆட்டத் தில் விளையாட வாய்ப்புள்ளதாக அணி வட்டாரங்கள் தெரிவித்தன.