தீ மட்டும் தான் தி.நகரில் பிரச்சினையா?
நண்பன் பிரகாஷின் தந்தை திடீரென காலமானார். மேற்கு மாம்பலத்தில் 40 ஆண்டுகள் வசித்தவர்.அதிகாலையிலேயே உயிர் பிரிந்து விட்டது. எப்படியும் நல்லடக்கத்திற்கு உடலை எடுத்துச் செல்ல நேரம் ஆகும் என்று 10 மணிக்கு வீட்டுக்குச் சென்றேன்.
அதற்குள் உடலை கண்ணம்மாபேட்டைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். நண்பன் திரும்பி வந்த பின் ஆறுதல் கூறிவிட்டு ஏன்டா இவ்ளோ சீக்கிரம் எடுத்திட்டு போயிட்ட என்றேன். “இல்லடா எனக்கு கஷ்டமாதான் இருந்துச்சு, ஆனா 9 மணிக்கு மேல ஆயிடுச்சுன்னா ஏரியாவுல பயங்கர டிராபிக் ஆயிடும் சீசன் டைம்ல டா, அப்பாவ நிம்மதியா எடுத்துட்டு போக முடியாது. வாழ்ந்தவரைக்கும் இந்த நெரிசல்லயே இருந்துட்டாரு,போகும் போதாவது நிம்மதியா போகட்டும் டா” என்றான்.
மாநகர மனிதன் மரணத்திற்கு பின்னும் சந்திக்கும் அவலங்கள் இவை.
தி நகரில் துணிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சென்ற வாரம் முழுவதும் பேசினோம். இதோ அடுத்த வாரம் தொடங்கிற்று. தினகரன் விடுதலை, அதிமுக அடுத்தது என நகரப் போகிறோம் எது வரை அப்படிப் போவோம், அடுத்து ஒரு தீ விபத்து தி.நகரில் நடைபெறும் வரை.
சரியாக 6 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தால் 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர் நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு 19 முக்கிய கட்டிடங்களை தி.நகரில் சீல் வைத்ததது சிஎம்டிஏ.
அதில் முக்கிய குற்றச்சாட்டே விபத்து நேர்ந்தால் அதிலிருந்து மீளும் திறன் இல்லாத கட்டிடங்கள் என்பதே. தீபாவளி சீசன் வியாபாரம் தடைபட்டு போக உச்சநீதிமன்றத்தை நாடினர் வியாபாரிகள். ஆனால் பொங்கல் பண்டிகையின் வியாபாரத்தின் போது தான் சில நாட்கள் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பின்னர் அரசு 2007 ஜூலைக்கு முன்பு கட்டபட்ட விதிமீறல் கட்டிடங்களுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது.
விதியை மீறுகிறோம் என்று தெரிந்தே மீறியவர்களுக்கு தெரிந்தே அபராதம் விதித்து விட்டு, அதை அப்படியே விட்டு விடுவது எப்படி நியாயம். அங்கு விபத்து நடந்த பிறகு இடிப்பது அதை விட அநியாயம்.
2011ல் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்ட போதும் ஊடகங்கள் சூடான விவாதங்களை நடத்தின விளைவு ஒன்றுமில்லையே..அடுத்து 6 தீபாவளியும் 6 பொங்கலும் ஆடி கொண்டாட்ட கூட்டமும் வந்து தானே போனது.
தி.நகர்வாசிகள் ஆம்புலனஸ் வசதி கூட பெற முடியாத நிலையை யார் பேசுவது?ஈமக்காரியத்துக்கு கூட டிராப்பிக்கை கருத்தில் கொண்டு செல்வது எவ்வளவு கொடுமையானது. வணிகப் பகுதி சூழ்ந்த குடியிருப்பில் உள்ளவர்களின் தினசரி வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்கள் உண்டாக்கும் விளைவுகள் எவ்வளவும் கொடுமையானது.
சரி குடியிருப்புக்கு தான் பிரச்சினை வணிக வளாகங்கள் முறையாக உள்ளதா? என்று பார்த்தால் அதிலும் திட்டமிடல் இல்லையே. வடக்கு உஸ்மான் ரோட்டின் ஒரு மூளையில் புறப்படும் ஒரு சர்க்கரை நோயாளி தனது இயற்கை உபாதையை கழிக்க பனகல் பார்க் வரை அல்லவா செல்ல வேண்டும்? அவ்வளவு பெரிய வணிகப் பகுதிக்கு ஒட்டுமொத்தமாக இருப்பது 6 கழிப்பிடங்கள் தானே.
சென்னை போன்ற வளரும் நகரங்களில் குடியிருப்பும் வணிகப்பகுதியும் ஒன்றாக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை சிவில் சமூகமும் அரசும் உணரவேயில்லை. யாராவது வீடு கட்ட திட்டமிட்டாலே. ரோட்டு மேல இருக்கா? அப்ப முன்னாடி கடை கட்டி வாடகைக்கு விட்டுரு பின்னாடி குடியிருந்துக்கோ என்றுதானே ஐடியாக்கள் வருகிறது.
மறு சீரமைக்கப்படாத கூவம் நதியை காரணம் காட்டி சென்னையின் பூர்வ குடி மக்கள் செம்மஞ்சேரி கண்ணகி நகர் போன்ற அகதி முகாம்களில் தள்ளப்பட்டுள்ளனர். சாமானியர்களை சட்டென அகற்றும் அரசு வணிக வளாகங்கள் குறித்து கள்ள மௌனம் சாதிக்கிறது.
FSI – FLOOR SPACE INDEX என்பது ஓர் இடத்தில் சாலை எந்த அளவு அகலமாக உள்ளதோ அதை பொறுத்து கட்டிடத்தின் உயரம் எத்தனை மாடிகள் இருக்க வேண்டும் என்று கணக்கிடும் அளவு. ஆனால் சென்னையை பொறுத்தவரை அந்த விதி 1% கூட பின்பற்றப்படுவதில்லை.
சிஎம்டிஏவில் பணியாற்றிய ஒரு ஐஏஎஸ் அதிகாரி கூறினார், எல்லா வளர்ந்த நகரங்களையும் பாருங்க ஒரு முக்கியமான சாலை ஆரம்பிக்கிற இடத்துல அகலம் சிறுசா இருக்கும். முடியும் போது பெருசா இருக்கும். அது தான் சீரான போக்குவரத்து வழி செய்யும் ஆனா சென்னையில் மட்டும் தான் அது தலைகீழ்…ஒவ்வொரு முறையும் வடபழனி காவல் நிலையத்திற்கு அருகில் அகண்டு விரியும் 100 அடி சாலை, நேஷனல் தியேட்டர் அருகிலும் வளசரவாக்கதிலும் 40 அடியாக சுருங்கி பின்னர் போரூரில் மீண்டும் 100 அடியாக முடிவதை பார்க்கும் போது அந்த அதிகாரி சொன்னது நினைவுக்கு வரும்.
குரோம்பேட்டையில ஆரம்பிச்சு எல்லா புறநகர் பகுதிகளிலும் கடைகள் வந்திருச்சே அப்புறம் ஏன் மக்கள் சாரிசாரியா தி.நகருக்கே வர்றாங்க, சந்தை பகுதியை பரவலாக்கினாலும் மக்கள் வருவதால் தான் தி.நகரில் மறு சீரமைப்பை செய்ய இயலவில்லை என்பார்கள். இங்கு தான் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் தங்கள் கிளைகளை புறநகரில் திறக்கலாம் அங்கு ஒரு கூட்டம் செல்லலாம் ஆனால் தி.நகர் என்பது அப்படி அல்ல அது அனைவருக்குமான சந்தை குறிப்பாக சாமானிய மக்களுக்கான சொர்க்கம். 5 ரூபாயிலிருந்து 5000 ரூபாய்க்குள் பொருட்கள் வாங்குவோரே அங்கு அதிகம்.
பிரச்சினையின் தன்மை இவ்வாறு இருக்க இங்கே தேவைப்படுது ஒரு அதிரடி மறுசீரமைப்பு திட்டம். தானாக உருவாகியும் சில இடங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டும் இருக்கும் மாநகரம் சென்னை.
இந்த நகரம் வாழ்வதற்கு தகுதியற்றதாக ஒவ்வொரு நாளும் மாறி வரும் நிலையில் அதனை செப்பனிடுவதற்கு அரசு இயந்திரத்தின் திட்டமிட்ட அதிரடி நடவடிக்கைகளும் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புமே அவசியம்.
இல்லையேல் மீண்டும் ஒரு விபத்து நிகழலாம், மீண்டும் ஒரு விவாதம் நடக்கலாம்… மீண்டும் அவர் அவர் வேலைக்கு செல்லலாம்… மீண்டும் என் நண்பன் பிரகாஷை போல் யாராவது ஒருவர் தன் தந்தையையோ தாயையோ அவசர அவசரமாக கண்ணம்மாபேட்டை இடுகாட்டு எடுத்துச் சென்று தகனம் செய்ய நேரலாம்….மீண்டும் இப்படி ஒரு கட்டுரையை நான் எழுத நேரலாம்….
ஆனால் தேவை அதுவல்ல…தேவை மாற்றம்… மாற்றம்… மனித வாழ்வை மேம்படுத்தும் மாற்றம்…. அது வாழ்விட மேம்பாட்டிலேயே நிகழும்.