என்.எஸ்.ஜி., விவகாரத்தில் ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ளோம்: சீனா
என்.எஸ்.ஜி.,யில் இந்தியா இணைவது தொடர்பாக ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ளோம் என தெரிவித்துள்ள சீனா, தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது எனவும் கூறி உள்ளது.
கடந்த ஆண்டு அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக, சியோலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை, என்.எஸ்.ஜி.,யில் சேர்க்கக் கூடாது என சீனா தடுத்துவிட்டது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தும் இந்தியாவுக்கு பலனில்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் என்.எஸ்.ஜி., நாடுகளின் கூட்டம் சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது அந்த அமைப்பில் இந்தியா இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்போது இவ்விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுடன் தொடர்பில் உள்ளோம் என சீனா கூறி உள்ளது. இருப்பினும், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினர் ஆவது சிக்கலாகி உள்ளது.