சிறை மேம்பாட்டிற்காக ரூ.4 கோடி வழங்கிய சிறைவாசிகள்…
ஆயுள் தண்டனை கைதிகள், சிறையில் உள்ள கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, ரூ. 4 கோடியை வழங்கிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சன்சல்குடா பகுதியில் உள்ள சிறைச்சாலையில், ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 45 பேர், அப்பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் ஷிப்ட் முறையில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த பெட்ரோல் பங்க், கடந்த 5ம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இந்த கைதிகளில் கடின உழைப்பால், வாடிக்கையாளர்களிடம் காட்டிய பரிவினாலும், பெட்ரோல் விற்பனை, கணிசமான அளவு அதிகரித்து, தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெட்ரோல் விற்பனையில் முதலிடத்திலும், தேசிய அளவில் 8ம் இடத்திலும் உள்ளது ( டீசல் விற்பனை சேர்க்கப்படவில்லை). இந்த பெட்ரோல் பங்கில், நாளொன்றுக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பெட்ரோல் பங்க், 5 ஆண்டுகளில், ரூ. 4 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபத்தை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், தங்களுக்கு உண்மையாக பணியாற்றிய அந்த சிறைக்ககைதிகள் வசமே வழங்கியது. அவர்கள் அந்த ரூ. 4 கோடியை, சிறைத்துறை மேம்பாட்டிற்காக வழங்கியுள்ளனர்.