செயற்கைகோள் தொழில்நுட்பம் : உலக நாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியா
இந்தியாவில் நாளுக்கு நாள் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது இடந்தில் இந்தியா இருந்தாலும், சேவை மற்றும் வேகத்தை பொறுத்த அளவில், மிகவும் பின் தங்கியே உள்ளது. அதிக அளவிலான இணைய சேவை ஆப்டிக் பைபர்ஸ் கேபிள் வழியே பெறப்படுவதும், நேரடி செயற்கைக்கோள் சேவை குறைந்த அளவில் கிடைப்பதுமே இதற்கு காரணம். இதற்கு தீர்வு காணவே ஜிசாட் 19 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது.
தற்போது, விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பழைய செயற்கைக்கோள்களில், 7 செயற்கைக்கோள்களின் ஆற்றலுக்கு இணையானது இந்த ஜிசாட் 19 செயற்கைக்கோள். இது, பூமி சுற்றும் திசையிலேயே விண்ணில் மிதந்தபடி சுற்றி வரும் என்பதால், இதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தடங்கலின்றி இணைய சேவை அதிக வேகத்தில் கிடைக்கும்.
ஜிசாட் 19 செயற்கைக்கோளை தொடர்ந்து, 5.6 டன் எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோளையும் விரைவில் விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ நிறுவனம். இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலை நின்று ஒரு வலைப்பின்னலை அமைப்பதன் மூலம், முழுவதும் விண்வெளியையே தளமாக கொண்ட இணையச் சேவை மண்டலத்தை இந்தியா பெறமுடியும். ஜிசாட் 19 செயற்கைக்கோள், அதிக அளவிலான டேட்டாக்களை சீரான வேகத்தில் அளிக்க உள்ளது. ஜிசாட் 11 செயற்கைக்கோளும் இந்த பணியில் இணையும்போது, இந்தியாவின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் கூட அதிவேக இணைய சேவை கிடைக்கும்.