பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால், தயிம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்கு ரபேல் நடால், டோமினிக் தயிம் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆடவருக்கான பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரான ரபேல் நடால், சக நாட்டைச் சேர்ந்த பாப்லோ கரெனோ பஸ்டாவை எதிர்த்து ஆடினார். பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினார். அவரது அபாரமான சர்வீஸ்களையும், பிளேசிங்குகளையும் எதிர் கொள்ள பஸ்டா மிகவும் திணறினார்.
முதல் செட்டை 6 – 2 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற நடால் அடுத்த, செட்டில் 2-0 என முன்னிலை யில் இருந்தபோது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டி யில் இருந்து விலகுவதாக பஸ்டா அறிவித்தார். இதைத்தொடர்ந்து இப்போட்டியில் நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை யிறுதிச் சுற்றுக்கு 10-வது முறையாக நடால் தகுதிபெற்றார்.
அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரிய வீரரான டோமினிக் தயிமை எதிர்த்து நடால் ஆடவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரரும் பிரெஞ்சு ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஜோகோவிக்கை 7-6, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தயிம் அதிர்ச்சி அளித்தார். கடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், தயிமை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் ரொமேனியா வீராங்கனையான சிமோனா ஹாலெப் 3-6, 7-6, 6-0 என்ற செட்கணக்கில் உக்ரைன் வீராங்கனை எலினா விட்டோலி னாவை வென்றார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா 7-6, 6-4 என்ற நேர் செட்களில் கர்சியாவை வென்றார்.