மியான்மர் ராணுவ விமான விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கண்டெடுப்பு
விபத்துக்குள்ளான மியான்மர் நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானத்தின் உதிரி பாகங்களும் அதில் பயணித்தவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 8.25 மணியளவில் அந்தமான் கடல் பகுதியில் விமானத்தின் உதிரி பாகங்களும் பயணிகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (புதன்கிழமை) வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானம் ஒன்று மாயமானது. மைக் மற்றும் யாங்கூன் நகரங்களுக்கிடையே தவேய் நகரி லிருந்து 20 மைல் தொலை வில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்துடனான இணைப்பு பகல் 1.35 மணிக்கு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதனிடையே, மாயமான விமானத்தின் சில உதிரிபாகங்கள் அந்தமான் கடல் பகுதி யிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக மைக் நகரில் உள்ள சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது.
120 பயணிகள்..
விபத்துக்குள்ளான விமானத்தில் 120-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பயணிகள் அனைவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. வானிலை தெளிவாக இருந்ததால், தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என விமானத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.