பிரிட்டன் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை: ராணி எலிசபெத்தை சந்தித்து உரிமை கோரினா
மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் தெரசா மே
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதுதொடர் பாக ராணி இரண்டாம் எலிசபெத்தை, பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை அடங்கிய பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு 5 ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப் படுகிறது. கடந்த 2015 மே மாதம் நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்றார்.
பிரெக்ஸிட் விவகாரத்தால் அவர் 2016 ஜூலை 13-ல் பதவியை ராஜினாமா செய்தார். தெரசா மே புதிய பிரதமராகப் பதவியேற்றார். கடந்த மே 2 ம் தேதி அவர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார்.
அதன்படி 650 உறுப்பினர்கள் கொண்ட பிரிட்டிஷ் நாடாளு மன்றத்துக்கான பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று காலை வெளியாகின.
ஆட்சியமைக்க 326 உறுப்பினர் களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 318 இடங்கள் கிடைத்தன. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்தின் எஸ்என்பி கட்சி 35, லிபரல் டெமாக்ரடிக் 12, வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றின. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பிரதமர் தெரசா மே தென்கிழக்கு இங்கிலாந்து தொகுதியிலும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரோமி கார்பின், ஐஸ்லிங்டன் நார்த் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சி 12 இடங்களை இழந்துள்ளது. தொழிலாளர் கட்சிக்கு கூடுதலாக 29 இடங்கள் கிடைத்துள்ளன. பிரதமர் தெரசா மே உட்பட மிக அதிகபட்சமாக 207 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் தெரசா மே நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐனநாயக யூனியனிஸ்ட் கட்சி ஆதரவுடன் புதிய அரசு அமைக் கப்படும். ஏற்கெனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் 10 நாட்களில் தொடங்கப்படும். இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனினும் தெரசா மேவுக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று சில மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனிடையே தொழிலாளர் கட்சி இதர கட்சிகளோடு இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெரோமி கார்பின் கூறியபோது, நாட்டுக்காக சேவையாற்ற தயாராக உள்ளேன் என்றார்.
எம்.பி.யான முதல் சீக்கிய பெண்
தொழிலாளர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத் கவுர் கில் என்பவர் எட்ஜ்பஸ்டன் தொகுதியில் போட்டி யிட்டார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் கரோலின் களத்தில் இருந்தார். இதில் பிரீத் கவுர் கில் 24,124 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கரோலினுக்கு 6917 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் எம்.பி. என்ற பெருமையை பிரீத் கவுர் கில் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 12 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.