ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ஜூலை 6ல் ஆர்.பி.ஐ., கவர்னர் விளக்கம்
ஜூலை 6ம் தேதி, பார்லி., குழுவிடம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் விளக்கமளிக்க உள்ளார்.
ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு, காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான பார்லி., நிலைக்குழு 4வது முறையாக அழைப்பு விடுத்துள்ளது. நிதித்துறை, ரிசர்வ் வங்கியின் உயரதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உர்ஜித் பட்டேல், பார்லி., குழுவினரிடம் ஜூலை 6ம் தேதி, விளக்கமளிக்க உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்., மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் நடந்த விளக்கக் கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து விடுத்த அழைப்புகளுக்கு, பணி காரணமாக உர்ஜித் பட்டேல் நேரில் ஆஜராகவில்லை.
அன்றைய தினம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? கருப்புப்பணம் எவ்வளவு வெளிவந்தது, வங்கி செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது? உள்ளிட்ட கேள்விகளை பார்லி., நிலைக்குழு எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.