உலகின் உணவு தொழிற்சாலையாக இந்தியாவை மாற்ற அரசின் திட்டம்
”மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டில், உணவு தொழிற்சாலைகள் துவக்க ஊக்குவிக்கப்படும்,” என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில், கேரள தொழிற்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், 119 கோடி ரூபாய் செலவில், உணவு பூங்கா அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியதாவது:
மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உணவு தொழிற்சாலை அமைக்க, மத்திய அரசு, உடனே அனுமதி வழங்குவதுடன், வெளிப்படையான நிர்வாக வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.
மாநிலங்களில், உணவு பூங்காக்கள் அமைக்க, மத்திய அரசு, தலா, 50 கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது. ஒரு உணவு பூங்கா மூலம், நேரடியாக, 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். மறைமுகமாக, 25 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைவர். இந்தியாவை உணவு தொழிற்சாலையாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கேரள தொழிற்துறை மேம்பாட்டு கழகமும் ஆலப்புழையில் ஒரு உணவுப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.