கலாம் ஆக விரும்பும் சாதனை மாணவன்
தனது தாயாருக்கு சமோசா தயாரிக்க உதவி செய்து படித்து, ஐஐடி நுழைவுத்தேர்வில் 60வது இடத்தை பிடித்துள்ள ஏழை மாணவன், தான் எதிர்காலத்தில் அப்துல் கலாம் போல் விஞ்ஞானியாக ஆக விரும்புவதாக கூறினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள குகாத்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுப்பா ராவ். ஏழையான இவர், வீட்டில் மனைவி தயாரிக்கும் சமோசா கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன் அபயாஸ் என்ற மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 1லட்சம் மட்டுமே. பள்ளி முடித்து வீடு திரும்பிய பின், வீட்டில் தனது தாயார் சமோசா தயாரிக்கும் பணிக்கு, மோகன் உதவி செய்வார். இதன் பின்னர், தனது பள்ளி பாடங்களை படிப்பார். மோகன் படிக்க வேண்டும் என அவரது தந்தையும், தாயும் தொடர்ந்து உற்சாகபடுத்தி வந்தனர்.
சமீபத்தில் பிளஸ் 2 முடித்த மோகன், ஐஐடியில் சேர நடந்த நுழைவு தேர்வை எழுதினார். இதில், 50 இடத்திற்குள் வருவேன் என எதிர்பார்த்த மோகனுக்கு, 60வது இடமே கிடைத்தது. இந்த முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தற்போது தனது மனதை தேற்றி கொண்டுள்ளார். இவர் ஆந்திராவில் நடந்த பொறியியல், மருத்துவம் மற்றும் விவசாய படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவு தேர்விலும், மாநில அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்தார்.
இது குறித்து மோகன் கூறியதாவது:எதிர்காலத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போல் விஞ்ஞானியாக விரும்புகிறேன். எனது தாய், தந்தையை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். மும்பை ஐஐடியில் படிக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தாயார் சூரியகலா கூறியதாவது: எப்போதும் கடினமாக படிக்க வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என நான் ஒரு போதும் கூறியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.