உலகக் கோப்பைக்கு ஈரான் தகுதி
2018-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஈரான் அணி தகுதி பெற்றுள்ளது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆசிய அணிகளுக்கு இடையோன தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் ஈரான் – உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. தெஹ்ரானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சர்தார் அஸ்மவுன் 23-வது நிமிடத்திலும், மெஹ்தி தாரேமி 88-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஈரான் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. ஆசிய அணிகளில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஈரான் 8 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 டிராவுடன் மொத்தம் 20 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது.
அந்த அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் மீதம் உள்ளது. இந்த இரு ஆட்டத்திலும் அந்த அணி தோல்வியை சந்தித்தாலும் அது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதே பிரிவில் தென் கொரியா 13 புள்ளிகளுடனும், உஸ்பெகிஸ்தான் 12 புள்ளி களுடனும் அடுத்த இரு இடங்களில் உள்ளன.
இதில் தென்கொரியாவுக்கு 3 ஆட்டங்களும், உஸ்பெகிஸ் தானுக்கு 2 ஆட்டங்களும் எஞ்சி உள்ளன. ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். அந்த வகையில் ஈரான் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்தைப் பிடிக்க கொரியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான போட்டியை நடத்தும் ரஷ்யா, 5 முறை சாம்பியனான பிரேசில் ஆகிய அணிகளுடன் தற்போது 3-வது அணியாக ஈரான் தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 32 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் இன்னும் 29 அணிகள் தகுதி பெற வேண்டி உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு ஈரான் தகுதி பெறுவது இது 5-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978, 1998, 2006, 2014-ம் ஆண்டுகளிலும் அந்த அணி உலகக் கோப்பையில் விளையாடி உள்ளது.