ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப் போட்டியில் நுழையும் முனைப்பில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று கார்டிப் நகரில் மோதுகின்றன. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதிக்கும் முனைப்பில் உள்ளது.
3 முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, கடந்த 42 வருடங்களாக ஐசிசி நடத்தும் 50 ஓவர் போட்டிகளில் பெரிய அளவிலான தொடரில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
இந்த சோகத்துக்கு இம்முறை சொந்த மண்ணில் தீர்வு காணும் முனைப்பில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறது. சமபலம் வாய்ந்த அந்த அணி கோப்பையை வெல்லும் தங்களது கனவை நினைவாக்கும் முனைப்பில் உள்ளது.
லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து தோல்வியை சந்திக்காமல் அரை இறுதியில் கால் பதித்துள்ளது. முதல் ஆட்டத் தில் வங்கதேச அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2-வது ஆட்டத்தில் நியூஸி லாந்து அணியை 87 ரன்கள் வித்தி யாசத்திலும், கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 40 ரன்கள் வித்தியா சத்திலும் இங்கிலாந்து அணி தோற்கடித்திருந்தது.
2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறிய இங்கிலாந்து அணி அதன் பின்னர் மறுசீராக்கத்துக்கு உட்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த அணி கடந்த இரு ஆண்டுகளாக பிரம்மிக்கத் தகுந்த வகையில் விளையாடி வருகிறது.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 4-1 என வென்றிருந்தது. இந்த தொடரில் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 444 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தது. மறுசீரமைப்புக்கு கிடைத்த சான்றாக அந்த அணியின் சமீபகாலமாக வெற்றிகள் அமைந்து வருகின்றன.
உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக திகழும் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவ ராக உள்ளார். இதன் காரண மாகவே அவர் ஐபிஎல் தொடரில் ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.
ஜோ ரூட் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஆவார். இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் இவரது பங்களிப்பு பிரதானமாக உள்ளது. மிடில் ஆர்டரில் கேப்டன் மோர்கன், ஜாஸ் பட்லர் பலம் சேர்க்கின்றனர். தொடக்க வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் அதிரடியில் மிரட்டக்கூடிய வர்கள்.
இதில் ஜேசன் ராய் இந்த தொடரில் சிறந்த திறனை வெளிப் படுத்தவில்லை. 3 ஆட்டங்களிலும் சேர்த்து அவர் 18 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்க வாய்ப்புள்ளது. வேகப் பந்து வீச்சில் ஜேக் பால், லயிம் பிளங்கெட், மார்க் வுட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற் பந்து வீச்சில் அடில் ரஷித் நெருக்கடி தரக்கூடும்.
கணிக்க முடியாத அணியாக விளங்கும் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி தட்டுத்தடுமாறியே அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணியிடம் 124 ரன்கள் வித்தியா சத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஆனால் அடுத்த ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான தென் ஆப்ரிக் காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நெருக்கடியான கடைசி ஆட்டத்தில் தோல்வி பாதையில் இருந்தபோதும் கடுமையாக போராடி இலங்கை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது 61 ரன்கள் சேர்த்ததுடன் 8-வது விக்கெட்டுக்கு முகமது அமிரின் உதவியுடன் 75 ரன்கள் சேர்த்து அணியை கரை சேர்த்தார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் பிரமாதமாக செயல்பட்டது என்று கூறமுடியாது.
கடைசி கட்டத்தில் சர்ப்ராஸ் அகமது கொடுத்த 2 கேட்ச்களை இலங்கை வீரர்கள் கோட்டை விட்டனர். மேலும் சில ரன் அவுட் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. முக்கியமான கட்டத்தில் இலங்கை வீரர்கள் செய்த தவறு காரணமாகவே தோல்வியின் பிடியில் இருந்து பாகிஸ்தான் தப்பித்தது.
இந்த ஆட்டத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்ட போதிலும் ஒருவழியாக வெற்றியை பாகிஸ் தான் அணி தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொண்டது. அந்த வகையில் இந்த வெற்றி அந்த அணியின் மன உறுதியை அதிகரிக்கவே செய்யும்.
36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்திய தொடக்க வீரரான பஹர் ஸமானிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். நடுக்கள பேட்டிங் அணியை பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது.
மூத்த வீரர்களான முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு திறனை வெளிப்படுத்த தவறுகின்றனர். இவர்களுடன் அசார் அலி, பாபர் அஸாம் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை குவிக்க உதவ முடியும்.
பந்து வீச்சில் முகமது அமிர், ஜூனைத் கான், ஹசன் அலி, பாஹிம் அஸ்ரப் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இவர்கள் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.
இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணி பலவீனமாகவே காணப்படுகிறது. ஆனால் போட்டியின் தினத்தில் பாகிஸ்தான் அணியின் செயல் பாட்டை கணிக்க முடியாது என்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று கூறிவிடவும் முடியாது.
இங்கிலாந்து:
மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஷேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, ஸ்டீவன் பின், மார்க் வுட்.
பாகிஸ்தான்:
சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹாரிஸ் சோகையில், பாஹிம் அஸ்ரப், பஹர் ஸமான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது அமிர், ஷதப் கான்.
நன்றி: ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தமிழ்
இடம்: கார்டிப்
நேரம்: பிற்பகல் 3
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்