திறந்தவெளி கழிப்பறைக்கு தீர்வு: உ.பி., மாநிலத்தில் அசத்தல் திட்டம்
உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது.
துாய்மை இந்தியா:
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோண்டா, மிகவும் பின்தங்கிய பகுதி. நாட்டின் சுத்தமான நகரங்கள் பட்டியலில், 434வது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில், மக்கள் பெரும்பாலும், திறந்த வெளிகளில் மலம் கழித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான, ‘துாய்மை இந்தியா’ மூலம், கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அசத்தல் திட்டம்:
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள், இதுவரை கட்டப்பட்டுள்ளன. வீட்டில் கழிப்பறை இருந்தாலும், மக்கள், பொது இடத்தில் மலம் கழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.இதை தடுக்கும் வகையில், பொது இடங்களில், வேம்பு, மா மற்றும் அரச மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த மரங்களை புனிதமாக கருதி, வழிபடும் பழக்கம், இப்பகுதி மக்களிடம் உள்ளதால், அதை சுற்றி மலம் கழிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த திட்டம் வெற்றி பெற துவங்கியுள்ளதை அடுத்து, கோண்டா மாவட்டம் முழுவதும், வேம்பு மற்றும் அரச மரங்களை நடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுவாமி உருவங்கள்:
அது போலவே, பொது இடங்களில் உள்ள அரசு கட்டடங்களின் மீது, பான் மசாலாவை சுவைத்து துப்பும் பழக்கமும், இப்பகுதி மக்களிடம் உள்ளது. இதை தடுப்பதற்காக, அரசு கட்டட சுவர்களில், சுவாமி உருவங்கள் பதித்த, ‘டைல்ஸ்கள்’ ஒட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம், அந்த கட்டடங்கள் மீது மக்கள் எச்சில் துப்புவதும் குறைந்து வருகிறது.
Advertise