பாதுகாப்புக்காகவே தடை: அமெரிக்க அரசு விளக்கம்
‘ஆறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோருக்கு, அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடை, மத ரீதியிலானது அல்ல; நாட்டின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை’ என, கோர்ட்டில், அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ஈரான், ஈராக், சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மற்றும் பயணிகள், அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார். இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘மத ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்க முடியாது’ என, அமெரிக்கர்கள் பலர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதிபர் டிரம்பின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து, பல்வேறு கோர்ட்டுகள் உத்தரவிட்டன.
இந்த உத்தரவுக்கு எதிராக, அமெரிக்காவின் ஒன்பதாவது சர்க்யூட் மேல்முறையீட்டு கோர்ட்டில், அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், கீழ்கோர்ட்டுகளின் உத்தரவை, மேல்முறையீட்டு கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, அரசு சார்பில், அட்டர்னி ஜெனரல், ஜெப் செஷன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஈரான் உள்ளிட்ட, ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை, மத ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல; பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்குடன் விதிக்கப்பட்டது. எனவே, அதற்கு, கோர்ட்டும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் நிலவும் தாக்குதல் சம்பவங்கள், அமெரிக்காவில் ஏற்படுவதை தடுக்கும் வகையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை, தவறாக சித்தரிக்கின்றனர். இதுதொடர்பாக, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும், நீதித்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோர்ட் விதித்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.