‘பஸ் டிரைவர் மொபைலில் பேசினால் படம் எடுத்து அனுப்பினால் பரிசு’
அரசு பஸ் டிரைவர் வாகனத்தை ஓட்டும்போது, மொபைலில் பேசுவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து, ‘வாட்ஸ் ஆப்’ சமூக தளம் மூலம் அனுப்பினால், டிரைவருக்கு அபராதம் விதிப்பதுடன், அந்த படம் அனுப்புபவருக்கு பரிசு அளிக்கும் திட்டத்தை, உத்தர பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைத்தது முதல், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து, மக்களின் பாராட்டை, மாநில அரசு பெற்று வருகிறது. ‘சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என, முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கூறியிருந்தார். அந்த வகையில், அரசு பஸ் டிரைவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில், புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சுதந்திர தேவ் சிங் கூறியதாவது: சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம், ஓட்டுனரின் கவனம் சிதறுவதே. அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள், மொபைலில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஸ் டிரைவர் மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை பார்த்தால், உடனே அதை படம் எடுத்து, குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் மூலமாக பொதுமக்கள் அனுப்பலாம். அவ்வாறு அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது போக்குவரத்து விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.