பாதி வழியில் பயணிகளை அச்சுறுத்தும் அரசு விரைவு பஸ்கள்
பராமரிக்கப்படாத அரசு விரைவு பஸ்கள், நடு வழியில் நின்று, பயணிகளை அச்சுறுத்துவது வாடிக்கையாகி வருகிறது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறது. தனியார் பஸ் கட்டணத்தை விட, மூன்றில் ஒரு பங்கு என, குறைந்த கட்டணத்தை வசூலிப்பதால், தொலைதுார பயணத்துக்கு, அரசு பஸ்களையே, பயணிகள் அதிகம் நாடுகின்றனர். ஆனால், சமீப காலமாக, அரசு விரைவு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால், பயணத்தின் நடுவில், பஸ்கள் பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் கூறியதாவது: சென்னையில் இருந்து, நேற்று முன்தினம், திருச்சி புறப்பட்ட, அல்ட்ரா டீலக்ஸ் பஸ் ஒன்றில், பயணித்தேன். இரவு, 10:00 மணிக்கு புறப்பட்ட பஸ், பெருங்களத்துார் சென்றதும், ‘பிரேக் பிடிக்கவில்லை’ என்று, நிறுத்தி விட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு பின், மிகவும் மெதுவாக இயக்கினர். இம்மாதம் முதல் வாரம் பள்ளி திறந்ததால், திருச்சியில் இருந்து, குழந்தைகளுடன் சென்னை புறப்பட்டேன். அதிக பயணிகள் ஏற்றப்பட்டனர்; நின்று கொண்டும் பலர் பயணித்தனர். பயணிகள் நெருக்கியதால், குழந்தைகள் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது; குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன், சென்னையில் இருந்து தஞ்சை புறப்பட்ட பஸ், சிதம்பரம் அருகே, டயர் வெடித்து நின்றது; மெக்கானிக் வராமல், நான்கு மணி நேரம் கஷ்டப்பட்டோம். அந்த இடத்தில், தண்ணீர் கூட கிடைக்கவில்லை.இது போன்ற நிகழ்வுகளால், பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பஸ்கள் இயக்கும் முன், இயக்க முடியுமா என, ஆய்வு செய்துவிட்ட இயக்குவது அவசியம். மேலும், பஸ்கள் பராமரிப்பிலும், அரசு விரைவு போக்குவரத்து கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.