ஜி.எஸ்.டி.,க்குள் நுழையாதவர்கள்…3,546 பேர்: 25ல் மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு
திருப்பூர் வணிகவரி மாவட்டத்தில், 3,546 பேர் இன்னும் ஜி.எஸ்.டி.,ல் பதிவு செய்யவில்லை; வரும், 25ல், மீண்டும் பதிவு துவங்குகிறது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவணிக வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வரும் ஜூலை, 1 முதல், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக உள்ளநிலையில், வணிக வரியில் பதிவு செய்த வர்த்தகர் விவரங்கள், ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவ., மாதம் முதல், ஜி.எஸ்.டி., பதிவு நடந்து வருகிறது.இணையதள சீரமைப்புக்காக, கடந்த மே, 31ல் பதிவு நிறுத்தப்பட்டது; மீண்டும், கடந்த, 1ம் தேதி முதல், பதிவு துவக்கப்பட்டு, 15ம் தேதியுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கோவை மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பூர் வணிக வரி மாவட்டம், பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, பஜார், மத்திய பகுதி 1,2, கொங்கு நகர், லட்சுமி நகர் என, ஒன்பது சரகங்களுடன் இயங்குகிறது.
வணிக வரி மாவட்டத்தில், 34 ஆயிரத்து, 179 வர்த்தகர்கள், வணிக வரியில் பதிவு செய்துள்ளனர். இவர்களில், மொத்தம், 30 ஆயிரத்து, 633 பேர் மட்டும், ஜி.எஸ்.டி.,க்குள் நுழைந்துள்ளனர்.திருப்பூர் மையப்பகுதி -1ல், 431; மையப்பகுதியில்-2ல், 801; வடக்கில், 397; தெற்கில், 113; பஜார் சரகத்தில், 238; கொங்கு நகரில், 142; லட்சுமி நகரில், 118; ஊரக பகுதியில், 741; பல்லடத்தில், 565 என மொத்தம், 3,546 பேர், இன்னும் ஜி.எஸ்.டி.,க்குள் நுழையவில்லை.வணிக வரித்துறை துணை கமிஷனர் காஞ்சனா கூறியதாவது:திருப்பூர் வணிக வரி மாவட்டத்தில், பெரும்பாலான வர்த்தகர்கள், பான் கார்டு விவரங்களை தவறாக பதிந்துள்ளனர்.
இதுபோன்றவர்களின் ஜி.எஸ்.டி., பதிவுகள் முழுமை பெறவில்லை. சிலருக்கு கடவுச்சொல் கிடைக்கவில்லை.இதுபோன்ற வர்த்தகர்கள், அருகாமையில் உள்ள சரக அலுவலகங்களில் விவரங்கள் தெரிவித்து, தங்கள் பதிவை முழுமைபெற செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி., பதிவு, கடந்த, 15ம் தேதியுடன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும், வரும் 25ம் தேதி முதல், பதிவுகள் துவங்கும். இதுவரை பதிவுசெய்யாத வர்த்தகர்கள், வாய்ப்பை பயன்படுத்தி, துரிதமாக ஜி.எஸ்.டி.,க்குள் நுழைய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.