குழந்தை மற்றும் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: 2 கருணை மனுவை நிராகரித்தார் பிரணாப்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 2012-ல் 4 வயது பெண் குழந்தையை 3 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, சடலத்தை சாக்கடையில் வீசிவிட்டுச் சென்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஜிதேந்திரா என்கிற ஜீத்து, பாபு என்கிற கேதன் மற்றும் சன்னி என்கிற தேவேந்திரா மூவருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் 2014-ல் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதேபோல் 2015, ஜனவரி 6-ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இவர்கள் மூன்று பேரும் கடந்த ஏப்ரல் மாதம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர். இம்மனுவை கடந்த மே 25-ம் தேதி பிரணாப் நிராகரித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் கடந்த 2007-ல் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரவுப் பணிக்காக வாடகை காரில் சென்ற 22 வயது இளம்பெண்ணை, ஓட்டுநரும், அவரது நண்பரும் இணைந்து பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். இவ்வழக் கிலும், குற்றவாளிகள் 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுவை கடந்த 2015, மே 8-ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இவர் களும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைத்தனர். கடந்த மே 26-ம் தேதி இந்த மனுவை பிரணாப் நிராகரித்தார். இதன்மூலம் தனது பதவி காலத்தில் அவர் நிராகரித்த மனுக்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. வரும் ஜூலை 24-ம் தேதி பிரணாப் முகர்ஜி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.