சரக்கு கப்பல் – போர் கப்பல் மோதல் : மாயமான வீரர்களை தேடும் பணி தீவிரம்
ஜப்பான் கடல் பகுதி யில், பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல், அமெரிக்க போர் கப்பல் மீது மோதியதில், மாயமானஅமெரிக்க வீரர்கள் ஏழு பேரை தேடும் பணி,தீவிரமாக நடக்கிறது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் யோகோசுகா பகுதியில், அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டுள்ள, ‘யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு’ போர்க்கப்பல், நேற்று முன்தினம் அதிகாலை, வழக்கம்போல், ஜப்பான் கடல் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது, ஜப்பானின் நகோயா நகரிலிருந்து, டோக்கியோவுக்கு, பிலிப்பைன்சைசேர்ந்த சரக்கு கப்பல், ‘ஏசிஎக்ஸ் கிறிஸ்டல்’ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு கப்பல் திடீரென திரும்பியதில், அதே பகுதியில், சென்று கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் மீது மோதியது.
இதில் போர்க்கப்பலின் வலது பகுதி மிகவும் சேதமடைந்தது.போர்க்கப்பலின் மேல்தளத்தில் இருந்த, ஏழு வீரர்களை காணவில்லை. போர்க்கப்பலின் கேப்டன் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல், 222 மீட்டர்நீளமும், 30 ஆயிரம் டன் எடையும் உடையது. அமெரிக்க போர்க்கப்பல், 154 மீட்டர் நீளமும், 10 ஆயிரம் டன் எடை உடையது. அளவில் பெரியது என்பதால், சரக்கு கப்பலுக்கு பெரிதாக பாதிப்பில்லை.மாயமான வீரர்களை தேடும் பணியில், அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றிஅமெரிக்க கடற்படை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாயமான ஏழு வீரர்களையும் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடக்கிறது.இந்தப் பணியில், அமெரிக்கா மற்றும் ஜப்பான் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’என்றார்.