தீபாவளி பயணம்: ரயில்கள் ‘ஹவுஸ்புல்’
தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் பயணம் செய்ய, அக்., 16ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு, துவங்கிய, 10 நிமிடங்களில் முடிந்தது. தீபாவளி பண்டிகை, அக்டோபர், 18ல் வருகிறது. ரயில் பயணத்திற்கு, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர், அக்., 16ல் பயணம் செய்ய, நேற்று முன்பதிவு செய்தனர். இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மாம்பலம், தாம்பரம் நிலையங்களில், காலையில் பயணிகள் கூட்டம், அதிகமாக இருந்தது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், கன்னியாகுமரி, திருச்செந்துார், முத்துநகர், நெல்லை, பாண்டியன், பொதிகை, மன்னை, காரைக்கால், ராமேஸ்வரம், குருவாயூர், துாத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு, காலை, 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கி, 10 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் நிரம்பின. அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளும், 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ராக்போர்ட், பல்லவன், உழவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில், உயர் வகுப்புகளில், மிக குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. அக்., 17ல் பயணிக்க இன்றும், அக்., 18ல் பயணிக்க, நாளையும்
முன்பதிவு செய்யலாம்.