எம்.பி.பி.எஸ்., சேர்க்கை: தமிழகத்தில் குழப்பம் நீடிப்பு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திடம், எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில், விளக்கம் கேட்டுள்ளது.
‘அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேர, ‘நீட்’ தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது; தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கியது. இதனால், வேறு வழியின்றி, ‘நீட்’ தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையில், தற்போதைய நிலை குறித்து, எம்.சி.ஐ., விளக்கம் கேட்டு வருகிறது. இதற்கு நேற்று பதில் அளித்த, தமிழக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், ‘மாணவர் சேர்க்கையில், தமிழக அரசின் அறிவுரைக்காக காத்திருக்கிறோம்’ என, தெரிவித்துள்ளனர்.