ஐ.எஸ்., பிடியில் சிக்கியதா கேரள மாநில கிராமம்?
இஸ்ரேல் – எகிப்து இடையே உள்ள, பாலஸ்தீனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பகுதியான, காஸா முனையின் பெயரை, கேரளாவில் உள்ள ஒரு கிராம சாலைக்கு சூட்ட, அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசர்கோடு மாவட்டம், படானே கிராமத்தில் இருந்து மட்டும், 21 இளைஞர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், படானே கிராமத்தில் உள்ள ஒரு தெருவுக்கு, பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை குறிப்பிடும் வகையில், காஸா சாலை எனப் பெயர் சூட்ட, அப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அதிகாரப்பூர்வமற்ற விழா ஒன்றையும் அவர்கள் நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்த விழாவில், காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பஷீர் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், ‘கடைசி நேரத்தில் விழாவில் கலந்து கொள்ளும்படி என்னை அழைத்தனர். மற்றபடி, சர்ச்சைக்குரிய பெயர் சூட்டப்படும் விஷயம் எனக்கு தெரியாது’ என, பஷீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த இளைஞர்களின் சொந்த கிராமத்தில் உள்ள தெருவுக்கு, ‘காஸா சாலை’ என பெயர் சூட்டப்பட்ட விஷயம், புலனாய்வு அமைப்புகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் பலர், பயங்கரவாத பாதையில் சென்றிருக்கலாம் என, புலனாய்வு அமைப்புகள் அச்சப்படுகின்றன.
இதற்கிடையே, காசர்கோடு நகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், ரமேஷ் கூறுகையில், ”படானே கிராம சாலைக்கு, அதிகாரப்பூர்வமற்ற முறையில், காஸா பெயரை சூட்டியுள்ளனர். அந்த சாலைக்கு, காஸா என பெயர் சூட்ட வேண்டும் என, நகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை கடுமையாக எதிர்ப்போம்,” என்றார்.