Breaking News
ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி அணிகளின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் லீக் சுற்றில் வெளியேறிய தென்ஆப்பிரிக்க அணி (119 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இறுதிப்போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தது. இதனால் இந்திய அணி (116 புள்ளிகள்) 2–வது இடத்தில் இருந்து 3–வது இடத்துக்கு சரிந்தது.

லீக் ஆட்டத்துடன் நடையை கட்டினாலும் ஆஸ்திரேலிய அணி (117 புள்ளிகள்) 3–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இங்கிலாந்து அணி (113 புள்ளிகள்) 4–வது இடத்திலும், நியூசிலாந்து அணி (111 புள்ளிகள்) 5–வது இடத்திலும் தொடருகின்றன.

சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி (95 புள்ளிகள்) 8–வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி 6–வது இடத்தை பிடித்துள்ளது. அரை இறுதிக்கு முன்னேறிய வங்காளதேச அணி (94 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 7–வது இடத்தை பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு இடம் சரிந்து (93 புள்ளிகள்) 8–வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி 77 புள்ளிகளுடன் 9–வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் அணி (54 புள்ளிகள்) 10–வது இடத்திலும் உள்ளன.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (865 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (861 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோரூட் (799 புள்ளிகள்) முறையே முதல் 4 இடத்தில் தொடருகின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக 5–வது இடம் பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரோகித் சர்மா 3 இடம் முன்னேறி சக வீரர் ஷிகர் தவானுடன் இணைந்து 10–வது இடத்தை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் சதமும், அரை இறுதியில் அரை சதமும் அடித்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 58 இடங்கள் முன்னேறி 97–வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர் டோனி ஒரு இடம் சரிந்து 15–வது இடம் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ரபடா (தென் ஆப்பிரிக்கா), சுனில் நரின் (வெஸ்ட்இண்டீஸ்), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து) ஆகியோர் முறையே முதல் 6 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 13 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி 17 இடங்கள் முன்னேறி 7–வது இடத்தை தனதாக்கி இருக்கிறார். வங்காளதேச வீரர் மோர்தசா 3 இடம் ஏற்றம் கண்டு 15–வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்கள் அக்‌ஷர் பட்டேல் 3 இடமும், அமித் மிஸ்ரா 3 இடமும் சரிந்து முறையே 16–வது மற்றும் 18–வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 இடம் முன்னேற்றம் கண்டு 19–வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.