‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்
இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான். இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்!
* நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன்பு பொறுப்பில்லாத பெண்ணாக அம்மா வீட்டில் வசித்தபடி நடிக்கவந்தேன். இப்போது பொறுப்புள்ள குடும்பத்தலைவி என்பதை உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பப் பொறுப்பு அதிகரித்துவிட்டதால் நேரத்தை வீணடிக்க மனம் வரவில்லை. குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நடிக்கவும் செய்வது எனக்கு புதிய அனுபவங்களை தருகிறது.
* திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் நடிகைகள் மீண்டும் நடிக்க வருவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று கலை ஆர்வம். மற்றொன்று பணத்தேவை. திருமணத்திற்கு பின்பு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு. இதுவரை பெற்ற அனுபவங்களை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
* திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்க விரும்பியபோது முதலில் அம்மாவிடம் சொன்னேன். ‘குடும்ப வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு நீ எந்த வேலையை வேண்டுமானாலும் செய். என் மகள் சிறந்த நடிகை என்பதைவிட, சிறந்த குடும்ப தலைவி என்பதே எனக்கு பெருமை தரும்’ என்றும் சொன்னார்.
* பொதுவாக நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே, சரியான வயதில் திருமணம் செய்துகொண்டேன். வயது கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை என்பது என் அம்மாவின் கருத்து. அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். என் கணவர் குணாலும் நான் திருமணத்திற்கு பின்பு நடிக்க எந்த தடையும் போடவில்லை.
* ‘அக்டோபர் 31’ சினிமாவில் சீக்கிய பெண்ணாக நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள் என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள் என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள். அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம், கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும் கலந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும் பிடித்திருக்கிறது. மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை அந்த படம் உணர்த்துகிறது.
* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும் அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம் என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.
* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின் அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள் நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது தவறான விஷயம்.
* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும் எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும் நாள் விரைவில் வரும்.