அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடை
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசாரை, தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கும், மத்திய அரசின் முயற்சிக்கு, மீண்டும் முட்டுக்கட்டை போட, சீனா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை, ஐ.நா., சபையில், மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்தது. ‘போதிய ஆதாரங்கள் அளிக்காமல், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது’ என, சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.
இந்நிலையில், நம் நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில், இந்த அமைப்புக்கும், அசாருக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை, மத்திய அரசு அளித்திருந்தது. அதனால், அடுத்த மாதம் நடக்கும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், அசாரை தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை, மத்திய அரசு மீண்டும் கொண்டு வர உள்ளது.
இந்நிலையில், ‘இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அதனால், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க முடியாது’ என, சீன வெளியுறவு அதிகாரிகள் கூறி வருகின்றனர்; இது, மத்திய அரசின் முயற்சிக்கு, மீண்டும் முட்டுக்கட்டை போடும் வகையில் அமைந்து உள்ளது.