கூடங்குளம் போராட்டத்திற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் பண உதவியா?
கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெளிநாட்டில் இருந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் நிதியுதவி அளித்திருக்கலாம் என தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ” ஸ்டிங் ஆபரேஷன்” மூலம் தெரியவந்திருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கு எதிராக பெரும் பேராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலக அளவில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பேராட்டமாக கருதப்பட்டது. இந்த போராட்டத்தை சுப. உதயகுமார் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தினார்.
இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்தனர். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். இரண்டு ஆண்டுகளாக தொய்வின்றி நடந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் அப்போதைய மத்திய அரசு திணறியது.
இந்த போராட்டம் நடக்கும் போதே வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்தது. அப்பொழுது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
” ஸ்டிங் ஆபரேஷன்”
இந்நிலையில் தனியார் தொலைகாட்சியான ரிபப்ளிக் டி.வி சார்பில் ” ஸ்டிங் ஆபரேஷன்” என்று நடத்தப்பட்டது. இந்த ஆபரேஷனில் ரிபப்ளிக் தொலைக்காட்சியைச் சேர்ந்த செய்தியாளர், சுப.உதயகுமாரனை மூன்று முறை சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது நடந்த உரையாடல் ரகசியமாக கேமராவில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. செய்தியாளர் பேசுகையில், ”இங்கிலாந்தில் உள்ள எனது பேராசிரியர் ஒருவர் அணு சக்திக்கு எதிரான உங்களது போராட்டத்துக்கு நிதி உதவி செய்ய முன்வந்து இருக்கிறார். அவர் அணு சக்திக்கு எதிரான கொள்கை உள்ளவர். அவர் எந்த முறையில் உங்களுக்கு நிதி அளிக்க முடியும்?’ எனக் கேட்கிறார்.
அதற்குப் பதில் அளித்த சுப.உதயகுமாரன், ‘போராட்டக் குழுவுக்கு என எந்த வங்கிக் கணக்கும் கிடையாது. அதனால் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் ரொக்கமாக கொடுக்கலாம். அல்லது, கட்சிக்கு உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தலாம். ஆனால், வெளிநாட்டில் இருந்து நேரடியாக பணத்தை அனுப்ப இயலாது. உள்ளூரில் உள்ள உங்களின் கணக்குக்கு அனுப்பியோ அல்லது உங்களது உறவினர், நண்பர்களது கணக்குக்கு அனுப்பி அதனை பின்னர் எங்களது கட்சியின் கணக்கில் செலுத்தலாம். உள் நாட்டில் இருந்து மட்டுமே எங்களது கட்சியின் கணக்கில் பணத்தை செலுத்த முடியும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிறருக்கோ அனுப்பச் சொல்லி அடுத்த முறை வரும்போது கொண்டு வாருங்கள்’, என்று தெரிவிக்கிறார்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் உதவி?
இந்த காட்சிகள் இன்று டி.வி. சானல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதனால் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பிண்ணணியில் பெரும் அளவு பணம் விளையைாடி இருப்பதாக ரிபப்ளிக் டி.வி., குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தேவாலயங்களின் பங்களிப்பு பெருமளவுக்கு இருந்ததாகவும் கிறிஸ்தவ ஆலயங்கள் மூலமாக நிதி உதவிகள் அளிக்கப்பட்டதாகவும் இந்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சுப. உதயகுமரன் கருத்து
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில் சுப.உதயகுமாரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஓர் இளம்பெண் வீட்டுக்கு வந்து தான் இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு செய்வதாகவும், அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனது பேராசிரியர் ஒருவர் கொஞசம் நிதியுதவி செய்ய விரும்புவதாகச் சொன்னார். நான் இயக்கத்துக்கு எப்போதுமே வங்கிக் கணக்கு கிடையாது அதனால் நான் அந்த உதவியைப் பெற முடியாது என்றேன். வேறு எந்த வழியிலும் உதவ முடியாதா என்று கேட்டார். எனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எங்கள் கட்சிக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதிலும் வெளிநாட்டு பணம் போட முடியாது என்றெல்லாம் சொன்னேன்.
நீங்கள் கூட வெளி நாட்டிலிருந்து பணம் போட முடியாது, ஆனால் உன் பெற்றோர் இந்தியாவுக்குள்ளே இருந்து பணம் போட முடியும் என்பது போன்ற விபரங்களைச் சொன்னேன். பணம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ரசீது கொடுத்துவிடுகிறோம் என்பதையும் சொல்லி, வெளிநாட்டுப் பணம் பெற நான் விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன். இதுதான் நடந்தது. வருங்காலத்தில் பணம் அனுப்பும்படி சொல்லவில்லை. இதைத்தான் மாபெரும் ஸ்டிங்க் ஆபரேஷன் போல சித்தரித்து ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர். ” என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் அந்த டி.வி. சானலில் வெளியான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.