பெல்ஜியம்: பிரஸ்செல்ஸ் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு
பிரஸ்செல்ஸ் ரயில் நிலையத்தில் சிறிய அளவில் நடந்த மனித வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸ் நகரின் லா கிராண்ட் பிளேஸ் ரயில் நிலையத்தில், மனித வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிய அளவில் நடந்த இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி, குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்காக பெல்ட் அணிந்திருந்தான் எனவும், குண்டை வெடிக்க செய்த போது ‛அல்லாஹூ அக்பர்’ என கூறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயங்கரவாதி 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெல்ட் பாம்ப் ஒன்று செயலிழக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பலத்த தீக்காயமடைந்த அவனை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளனான அவன், போலீசாரின் கண்காணிப்பில் இருந்தவன் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பிரஸ்செல்ஸ் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.