ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா- ஆடவர் பிரிவில் ஜெயராம், காஷ்யப் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி காந்த், சாய் பிரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் பிரணாய், காஷ்யப், அஜெய் ஜெயராம் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தோனேஷிய ஓபனில் பட்டம் வென்ற இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-13, 21-16 என்ற நேர் செட்டில் சீன தைபேவின் கன் சாவ் யூவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரணீத் 10-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காந்த் தனது அடுத்த சுற்றில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடுகிறார்.
சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் சீனாவின் ஹுவாங்குடன் மோதுகிறார். இவர்கள் இருவரும் முன்னேற்றம் கண்ட நிலையில் மற்ற இந்திய வீரர்களான பிரணாய், அஜெய் ஜெயராம், காஷ்யப் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர்.
ஜெயராம் 14-21, 21-10, 21-9 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான ஹாங் காங்கின் லாங் அங்குஸூடமும், காஷ்யப் 18-21, 21-14, 15-21 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவிடமும் போராடி வீழ்ந்தனர்.
பிரணாய் 19-21, 13-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ராஜீவிடமும், இளம் வீரரான சிரில் வர்மா 16-21, 8-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனிடமும் தோல்வி அடைந்னர்.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரான்சிஸ் ஆல்வின், தருண் கோனா ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ஹென்ட்ரா சத்தியவான், மலேசியாவின் பூன் ஹியாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 20-22, 6-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தகேஷி கமுரா, கெய்கோ சோனோடா ஜோடியிடம் வீழ்ந்தது. அதேவேளையில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-19, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் லீ சுன் ஹே ரெஜினால்டு, லா சவுக் ஹிம் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் 21-10, 21-16 என்ற நேர் செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் சுங் ஜி ஹைனை வீழ்த்தினார்.
5-ம் நிலை வீராங்கனையும் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 17-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா சடோவை 21-17, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை யான ருத்விகா ஷிவானி 17-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷென் ஜியாசினிடம் தோல்வியடைந்தார். மகளிர் இரட் டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கிரெட்டி ஜோடி 21-11, 21-13 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜெனிபர் டாம், வென்டி ஷென் ஜோடியை வீழ்த்தியது.