சகோதரர்களுடனான பிரச்சினையால் சர்ச்சை: சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்
சிங்கப்பூர் பிரதமருக்கும் அவரது 2 சகோதரர்களுக்கும் இடையிலான பிரச்சினை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்காக நாட்டு பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார். அதி காரத்தை தவறாக பயன் படுத்தியதாக கூறப்படும் குற்றச் சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் செயல் பாட்டு கட்சியின் (பிஏபி) தலைவரும் பிரதமருமான லீ சீயன் லூங் வீடியோ மூலம் விடுத்த அறிக்கை யில் கூறும்போது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக வரும் ஜூலை 3-ம் தேதி நாடாளுமன்றத் தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்மீது எம்.பி.க்கள் சுதந்திரமாக கருத்து தெரிவித்து வாக்களிக்கலாம். கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட மாட்டாது. எங்கள் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இதன்மூலம் அரசு மீது நம்பிக்கை ஏற்படும்” என்றார்.
சிங்கப்பூரில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது மிகவும் அரிது. 1959-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பிஏபி கட்சி, லீ குவான் யூ என்பவரால் நிறுவட்டது. மிகச் சிறிய இந்த நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருவெடுக்க அவர் முக்கிய பங்காற்றினார். 31 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த யூ 2015 மார்ச் மாதம் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது முத்த மகன் லூங் பிரதமரானார். இந் நிலையில், பிரதமரின் சகோதரர் லீ சீயன் யாங் மற்றும் லீ வெய் லிங் ஆகிய இருவரும் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
அதில், தங்களது குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை இடிக்க பிரதமர் லூங் அனுமதி மறுப்பதாகவும் இதற்காக அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதுகுறித்து வீடியோ காட்சி மூலம் லூங் விரிவான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எனது 2 சகோதரர்களின் குற்றச்சாட்டு காரணமாக சிங்கப்பூரின் புகழ் மற்றும் அரசு மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் என்ற வகையில் நான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என கூறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சி அரசு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானதுடன் பிரதமரின் முகநூல் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.