புதிய பயிற்சியாளர் தேர்வு: கூடுதல் விண்ணப்பங்களை கோர இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகிய நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் கிரிக்கெட் ஆலோ சனைக் குழுவுக்கு வசதியாக மேலும் பலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
தனது பயிற்சி வழிமுறைகள் மீது கேப்டன் விராட் கோலிக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவரது ஓராண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த போதிலும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர் வரை அவரது பணி நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய அணியுடன் பயணிக்காத கும்ப்ளே, ராஜினாமா முடிவை மேற்கொண்டார்.
அனில் கும்ப்ளே பதவி விலகி யதை தொடர்ந்து புதிய பயிற்சி யாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை பிசிசிஐ விரைவு படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் புதிதாக விண்ணப்பம் கோரப்படலாம். இதனால் விருப்பம் உள்ளவர் களும், தகுதியான நபர்களும் உயர்ந்த நிலையில் உள்ள பயிற்சி யாளர் பதவிக்கு விண்ணப்பிக் கலாம்.
கடந்த முறை நாங்கள் விண்ணப்பங்கள் கோரியபோது, அனில் கும்ப்ளே நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள் ளும் வாய்ப்பை பெற்றிருந்தார். அவர் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டிருந்ததால் பலரும் விண்ணப்பிப்பதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. பயிற்சி யாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பலரிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அடுத்த பயிற்சியாளர் யார் என்பதை கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வு செய்யும். அதிகம் பேர் விண்ணப்பிக்கும் சிறந்த நபரை தேர்வு செய்ய முடியும்” என்றார்.
தலைமை பயிற்சியாளருக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவாக கடந்த மே மாதம் 31-ம் தேதியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து முன்னாள் அதிரடி வீரர் சேவக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைப்ஸ், டோடா கணேஷ் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சி யாளர் கிரெய்க் மெக்டர் மோட்டும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் காலம் கடந்ததாகக் கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருந்தது.