மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை:
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் வெண்கல சிலை அவரது சொந்த ஊரில் ஜூலை 9-ம் தேதி திறக்கப்படுகிறது.
கே.பாலசந்தரின் பிறந்த நாள் ஜூலை 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பாலசந்தரின் வெண்கல சிலை திறப்பு விழா நடக்கிறது. அவரது மனைவி ராஜம் பாலசந்தர் சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வஸந்த் சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கே.பாலசந்தரின் வெண்கல சிலையை அமைக்கும் கவிஞர் வைரமுத்து இதுகுறித்து கூறிய தாவது:
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடை மாற்றத்தை ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர். சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக் கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப் படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்து கொள்ளப்படாதவை என்று மட்டுமே பிரிக்கலாம்.
அவருக்கு சிலை அமைப்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரம். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்.
இவ்வாறு வைரமுத்து கூறினார்.