ஹாக்கி கால் இறுதியில் இந்தியா- மலேசியா மோதல்
உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா – மலேசியா அணிகள் இன்று மோதுகின்றன.
உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டங்களில் இந்திய அணி தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து, கனடா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த நிலையில் கடைசி ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததற்கு, கோல்கள் அடிக்கும் பல்வேறு வாய்ப்புகளை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததே காரணமாக அமைந்தது.
இந்த ஆட்டம் முடிவடைந்ததும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கூறும்போது, “லீக் ஆட்டங்களில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமாக அமைந்தது. எனினும் இந்த ஆட்டத்தில் எங்களுக்கும் வாய்ப்பு இருந்தது. நல்ல விஷயம் என்னவென்றால் 3-0 என பின்தங்கிய நிலையில் இருந்த போதிலும் மீண்டு வந்தோம். ஆனால் போதுமான அளவு சிறப்பாக விளையாடவில்லை. அதற்கான தண்டனையை பெற்றோம்” என்றார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக செய்த தவறை இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். ஏனேனில் மலேசிய அணி போட்டியின் தினத்தில் எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் திறன் கொண்டது.
தரவரிசையில் இந்திய அணி 6-வது இடத்தில் உள்ள வேளையில், மலேசிய அணி 14-வது இடம் வகிக்கிறது. இந்திய அணியின் ஸ்டிரைக்கர் ஆகாஷ்தீப் சிங், நல்ல பார்மில் உள்ளார். இந்த தொடரில் அவர் சில சிறந்த கோல்களை அடித்துள்ளார். ஆகாஷ்தீப் சிங்குக்கு எஸ்.வி.சுனில், தல்வீந்தர் சிங், மன்தீப் சிங் ஆகியோரும் உறுதுணையாக உள்ளனர்.
நடுகள வீரர்களான சர்தார் சிங், கேப்டன் மன்பிரித் சிங் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளனர். எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை தடுப் பதில் அனுபவற்ற வீரர்கள் காணப் படுவதால் சீனியர் வீரர்களான இவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இல்லையெனில் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு கூட தள்ளப்படக்கூடும். காயம் காரணமாக இந்த தொடரில் அனுபவ வீரரான ரூபிந்தர்பால் சிங் விளையாடாத நிலையில் அந்த இடத்தை இளம் வீரரான ஹர்மான்பிரித் சிங், ஜஸ்ஜித் சிங் குலார் ஆகியோரால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
பெனால்டி கார்னர் வாய்ப்பு களை இவர்களால் நேர்த்தியாக கையாள முடியாதது சற்று பின்ன டைவாக உள்ளது. அதேவேளை யில் கோல் கீப்பர்களான விகாஷ் தாகியா, ஆகாஷ் சிக்டே ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளன்.