ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: நம்பர் ஒன் வீரரை வீழ்த்தினார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்- பி.வி.சிந்து, சாய்னா நெவால் கால் இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி காந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 11-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், உலகத் தரவரிசையில் முதல் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடினார்.
இதில் முதல் செட்டை காந்த் 15-21 என இழந்தார். ஆனால் அடுத்த இரு செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-13, 21-13 என கைப்பற்றினார். 57 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறி னார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் தொடரிலும் சன் வான் ஹோவை, காந்த் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கால் இறுதியில் காந்த், தனது சகநாட்டை சேர்ந்த சாய் பிரணீத்துடன் மோத உள்ளார்.
தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் 25-ம் நிலை வீரரான சீனாவின் ஹூவாங் யுஜியாங்கை 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்றது.
சிந்து, சாய்னா வெற்றி
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷென் ஜியாஷினை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-13, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 16-ம் நிலை வீராங்கனையான இந்தியா வின் சாய்னா நெவால், 26-ம் நிலை வீராங்கனையான மலேசியாவின் சோனியா ஷியாவை எதிர்கொண் டார். இதில் முதல் செட்டை சாய்னா 21-15 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் சோனியா கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் 20-20 என சமநிலையில் இருந்த போது சரியான இடத்தில் பந்துகளை பிளேசிங் செய்து இந்த செட்டை சோனியா 22-20 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் பரபரப்பானது. இந்த செட்டில் சாய்னா தொடக்கத்திலேயே 4-0 என ஆதிக்கம் செலுத்தினார்.
எனினும் சோனியா 7-8 என நெருங்கி வந்தார். ஆனால் சோனியா அடுத்த ஒரு புள்ளியை சேர்ப்பதற்குள் சாய்னா 16-8 என வலுவான முன்னிலைக்கு சென்றார். முடிவில் இந்த செட்டை சாய்னா 21-14 என தன்வசப்படுத்தினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 15-21, 22-20, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ரெட்டி ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடியும் தங்களது 2-வது சுற்றில் தோல்வி அடைந்தது.