சீனாவின் ஜூல்பிஹருடன் மோதுகிறார் விஜேந்தர் சிங்
டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் பட்டத்தை தக்கவைத் துக்கொண்ட இந்தியாவின் தொழில் முறை குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங் தனது 2-வது பட்டத்துக்கான போட்டியில் சீன வீரர் ஜூல்பிஹர் மைடியாலியை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த போட்டி கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டிக்கு உலக குத்துச்சண்டை சம்மேளனம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
31 வயதான விஜேந்தர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற போட்டியில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் செகாவை வீழ்த்தி ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இதன்மூலம் தான் பங்கேற்ற 8 போட்டிகளிலுமே விஜேந்தர் வெற்றி பெற்று தோல்வியை சந்திக் காத நாயகனாக வலம் வருகிறார். இதில் 7 ஆட்டங்களில் அவர் நாக் அவுட்டில் வெற்றி பெற்றார் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஜூல்பிஹரும் விஜேந்தர் போன்றே கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொழில்முறை போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை அவர் 8 போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். தொழில்முறை குத்துச்சண்டையில் சீனாவில் நம்பர் ஒன் வீரராக திகழும் அவர் 5 முறை நாக் அவுட்டில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் தான்சானியாவைச் சேர்ந்த தாமஸ் மஷாலியை வீழ்த்தி ஓரியன்டல் பட்டத்தை ஜூல்பிஹர் வென்றிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் எதிராளியின் பட்டத்தையும் சேர்த்து கைப்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.