தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்கள் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?
ஜனாதிபதி தேர்தலில், முதல்வர் பழனிசாமி அணி, பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்கும் நிலையில், தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்கள் யாரை ஆதரிப்பர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் ஆதரவு கேட்டார். இது குறித்து ஆலோசிக்க, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 34 பேர் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிந்த பின், முதல்வர் பழனிசாமி, ‘பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிப்பது’ என, ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நிலை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த, இப்தார் நோன்பு நிகழ்ச்சியையும், தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்தனர். சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டில், நேற்று முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் மற்றும் நடிகர் கருணாஸ் உட்பட, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க, சசிகலா முடிவு செய்துள்ளதால், அவரது உத்தரவின்படி செயல்படுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், முதல்வர் பழனிசாமி நிகழ்ச்சிகளை, தொடர்ந்து புறக்கணிப்பது எனறும் முடிவெடுத்துள்ளனர்.