‘தெறி’ படப்பிடிப்பில் விஜய்யின் அக்கறை: நடிகர் அர்ஜெய் நெகிழ்ச்சி
‘தெறி’ படப்பிடிப்பில் விஜய்யின் அக்கறை குறித்து நெகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அர்ஜெய்
தமிழ் திரையுலகில் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அர்ஜெய். ஜூன் 22-ம் தேதி பிறந்தநாளை முன்னிட்டு ‘தெறி’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அக்கறையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அர்ஜெய் கூறியிருப்பதாவது:
“அன்று மழையில் சண்டைக் காட்சிகள் விஜய் அண்ணாவுக்கும் எனக்கும் படமாக்கப்பட்டது. மொத்தம் 5 நாட்கள் படப்பிடிப்பு, முதல் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நல்ல படியாக முடிந்தது. 4-ம் நாள் எனக்கு உடல்நலக்குறைவு (காய்ச்சல்) ஏற்பட்டது.
மழை படக்காட்சி என்பதால் மிகவும் கடினமாக இருந்தது, ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து விட்டேன். என்னை கவனித்துக் கொண்டிருந்த விஜய் அண்ணா, என்னிடம் வந்து ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, சிறிது தயக்கத்துடன் “அண்ணா காய்ச்சலா இருக்கு” என்றேன்.
மறுநொடியே இயக்குநரை அழைத்து படப்பிடிப்பை நிறுத்தினார். “காய்ச்சல் அடிக்கிறது, மழையில் இருக்கிறாய். நீ உடனே மருத்துவமனைக்குச் செல். படப்பிடிப்பை நாளை பார்த்து கொள்ளலாம் நீ முதலில் உன் உடலை கவனி. அது தான் ஒரு நடிகனுக்கு மிக முக்கியம்” என்றார் விஜய் அண்ணா.
எனக்கு ஒரு நிமிடம் மெய் சிலிர்த்து விட்டது. ஒரு இமயம் தொட்ட நடிகர் இந்த சிறுநடிகனுக்காக படப்பிடிப்பையே நிறுத்தச் சொன்னார்ர். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “அண்ணா எனக்கு மருந்துகள் மட்டும் போதும்” என்றவுடன் “உறுதியாகவா” என்று கேட்டுவிட்டு மருந்துகளை வரவழைத்தார். அதனை எடுத்துவிட்டு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்ததோம்
விஜய் அண்ணா முதலில் ஒரு மனிதனை மனிதனாக நடத்துகிறார். என்னைப் போல் சிறு நடிகருக்கு கூட அவர் கொடுத்த முக்கியத்துவம் அவருடைய மனிதநேயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. விஜய் அண்ணாவின் தம்பி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்