கிரிக்கெட்: ஆட்டம் ரத்து; வென்றது மழை!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அபாரமாக ஆடிய இந்தியாவின் ஷிகர் தவான், ரகானே அரைசதம் கடந்து அசத்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, போர்ட் ஆப் ஸ்பெயினில் முதல் போட்டி நடந்தது. இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவ் அறிமுகமானார். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதால், ரகானே இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சூப்பர் ஜோடி:
இந்திய அணிக்கு ரகானே, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கம்மின்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 17வது அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய தவான், நர்ஸ் வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். ஜோசப் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான், ஒருநாள் போட்டியில் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த போது, ஜோசப் பந்தில் ரகானே (62) அவுட்டானார். ஜோசப் பந்தில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்த தவான், 92 பந்தில் 87 ரன்கள் எடுத்த போது, தேவேந்திர பிஷூ ‘சுழலில்’ சிக்கினார். அடுத்து வந்த யுவராஜ் சிங் (4) ஏமாற்றினார். கேப்டன் விராத் கோஹ்லி, நிதானமாக விளையாடினார்.
இந்திய அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் போட்டி துவங்கிய நிலையில், 39.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். கேப்டன் கோஹ்லி (32), தோனி (9) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், ஜோசப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
நான்கு ஆண்டுகளுக்கு பின்…
போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று முதன்முறையாக ஒருநாள் போட்டி நடந்தது. கடைசியாக, 2013ல் (ஜூலை 11) இங்கு நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, கோப்பையை கைப்பற்றியது.
ஐந்தாவது முறை:
இந்தியாவின் தவான், ரகானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இந்த ஜோடி, ஒருநாள் போட்டி வரலாற்றில், தொடர்ந்து 5வது முறையாக 50 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்துள்ளது. இதற்கு முன், 2015ல் 4 முறை (எதிர்: இங்கிலாந்து-83, எதிர்: தென் ஆப்ரிக்கா-125, 56, 112 ரன்கள்) நல்ல ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்திருந்தது.
மூன்றாவது ஜோடி:
அபாரமாக ஆடிய ஷிகர் தவான், ரகானே ஜோடி (132 ரன்), வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் விக்கெட்டுக்கு 100 அல்லது அதற்கு மேல் ரன்கள் சேர்த்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமை பெற்றது. இதற்கு முன், இந்தியாவின் சச்சின் – கங்குலி (116* ரன், 1997, இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்), ரோகித் சர்மா – தவான் (123 ரன், 2013, இடம்: போர்ட் ஆப் ஸ்பெயின்) ஜோடிகள் இம்மைல்கல்லை எட்டியிருந்தன.