தவண், ரஹானே அரைசதங்களுடன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது
மே.இ.தீவுகளுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி 39.3 ஓவர்களுக்கு மேல் மழை காரணமாக நடைபெற முடியாமல் கைவிடப்பட்டது. இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் மழையால் தடைபட்டது.
விராட் கோலி, 32 ரன்களுடனும், தோனி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். விராட் கோலி பொதுவாக சிக்கல் இல்லாமல் ஆடினாலும் 47 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியை மட்டுமே அடிக்க முடிந்தது. சரளமாக ஆட முடியாதது போல் தெரிந்தது.
ஷிகர் தவண் மிகச்சரளமாக ஆடினார். ஷிகர் தவணும், ரஹானேயும் முதல் விக்கெட்டுக்காக 25 ஓவர்களில் 132 ரன்கள் சேர்த்தனர். ரஹானே 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார். ஆஃப் திசையில் பளார் பளார் பவுண்டரிகளை விளாசினார், ஒரு நேர் பவுண்டரி கிளாஸ்.
ஷிகர் தவண் இன்னிங்சில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. ஜோசப் லெக் திசையில் ஒவர் பிட்ச் பந்தை வீச அதனை ஜெயசூரியா பாணியில் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பில் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து தவண் அரைசதம் கடந்தார். 6 இன்னிங்ஸ்களில் 4வது அரைசதம் கண்டு தனது பார்மை உறுதி செய்தார் தவன். பிறகு இதே ஜோசப் வீசிய வேகம் குறைந்த ஷார்ட் பிட்ச் பந்தை பிரமாதமாக அட்ஜெஸ்ட் செய்து கொண்டு டீப் மிட்விக்கெட்டுக்கு சிக்சர் பறக்க விட்டார்.
அஜிக்கிய ரஹானே 62 ரன்கலில் மிகுயெல் கமின்ஸின் வேகம் குறைந்த பந்தை கணிக்காமல் லீடிங் எட்ஜில் மிட் ஆனில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஷிகர் தவண் அருமையான மிகச்சரளமான சதம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது தேவேந்திர பிஷுவின் வேகமான லெக்ஸ்பின்னுக்கு எல்.பி.ஆகி வெளியேறினார்.
யுவராஜ் சிங்குக்கு மிகவும் டைட்டாக வீசி மே.இ.பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் அவர் 4 ரன்களில் வெளியேறினார். லெக் திசையில் ஹோல்டர் வீசிய பவுண்டரி பந்தை நேராக மிட் விக்கெட் பீல்டர் லூயிஸ் கையில் அருகிலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் யுவராஜ்.
தேவேந்திர பிஷூ 10 ஓவர்களில் 39 ரன்களையே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினார்.
300 ரன்களை நோக்கி கோலி, தோனியின் ஒரு அரிய கூட்டணி முன்னேறும் என்று எதிர்பார்த்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட நேர்ந்தது. 2-வது போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது,