நாளை போரூர் மேம்பாலம் திறப்பு விழா; ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின் விடிவு
போரூர் மேம்பாலம், ஏழு ஆண்டுகள் இழுத்தடிப்பிற்கு பின், நாளை திறப்பு விழா காண இருக்கிறது.
மவுன்ட் – பூந்தமல்லி சாலையும், ஆற்காடு சாலையும் சந்திக்கும் இடமாக, போரூர் ரவுண்டானா உள்ளது. மேலும், மவுன்ட் – பூந்தமல்லி சாலை, பெங்களூரு நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் காணப்படும். அது மட்டுமல்லாமல், குன்றத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஆற்காடு சாலையை பயன்படுத்தி தான், சென்னை நகருக்குள் செல்கின்றன. இதனால், போரூர் சந்திப்பில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
பணிகள் முடக்கம்இதனால், இந்த நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், 480 மீட்டர் நீளம்; 37.2 மீட்டர் அகலம், இருபுறமும் தலா, 7.5 மீட்டரில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. போரூர் மேம்பாலம் கட்டுவதற்கு, தி.மு.க., ஆட்சியில், 15 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான பணிகள், 2010ல் துவங்கப்பட்டன. 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மேம்பாலப் பணிகள் முடங்கின.
மேம்பால பணியை, திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. ஒப்பந்தப்படி, 2010, பிப்., 15ல் பணிகள் துவங்கி, 2011, ஆக., 14ல் முடிக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறை சார்பில், 2010 பிப்ரவரியில் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்பட்டது. பூந்தமல்லி சாலையில், ஏழு துாண்களும்; மவுன்ட் சாலையில், ஏழு துாண்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. இதைதொடர்ந்து, பூந்தமல்லி சாலையில், ஏழு துாண்கள் அமைக்கப்பட்டன.நில ஆர்ஜித பணிகளில் ஏற்பட்ட இடையூறால், பூந்தமல்லி சாலையில், மேலும், மூன்று துாண்கள் அமைக்க முடியாமல் பணிகள் முடங்கின.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தென் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல, 1,600 மீ., நீளத்திற்கு, போரூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து, கிண்டி செல்லும் சாலையின் நடுவில், குடிநீர் வடிகால் வாரியத்தால் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதை மாற்றி அமைத்தால் தான், பணிகள் தொடரும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்காக, நெடுஞ்சாலை துறை சார்பில், குடிநீர் வாரியத்துக்கு, 5.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், குழாய் அகற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், குடிநீர் வாரியம், 5.5 கோடி ரூபாயை, நெடுஞ்சாலை துறையிடம் திருப்பி கொடுத்தது. இதைதொடர்ந்து, 2011 முதல் இரண்டு ஆண்டுகள், பணிகள் முடங்கின.
போராட்டங்கள்மேம்பாலப் பணியை மீண்டும் துவங்க வலியுறுத்தி, தி.மு.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு சங்கங்கள், வணிகர் சங்கங்கள் சார்பிலும், போராட்டங்கள் நடந்தன.இதையடுத்து, 2014ல், 54 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலத்தின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டது. 2015 செப்டம்பர் முதல், மீண்டும் பணிகள் துவக்கி நடைபெற்று வந்தன. 505 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலத்திற்கு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் இழுபறிக்கு பின், தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக காத்திருக்கிறது. நாளை மேம்பாலம் திறந்து வைக்கப்படுகிறது.
என்ன காரணம்?சமீபத்தில் பெய்த மழை காரணமாக, போரூர் சந்திப்பில் தண்ணீர் தேங்கியது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், எரிச்சல் அடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள், போரூர் மேம்பாலத்தில் பயணிக்க துவங்கினர்.இவர்களை தொடர்ந்து, கார், சரக்கு வாகனங்கள், மாநகர பேருந்து உள்ளிட்டவையும், மேம்பாலத்தில் பயணித்தன. இதனால் அதிர்ச்சி அடைத்த அதிகாரிகள், அவசர அவசரமாக வந்து,மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர்.இதற்கு மேலும், பொதுமக்கள் பொறுமை காக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் தான், போரூர் மேம்பாலத்தை திறக்க, தமிழக அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில், போரூரில், நான்கு மணி நேரம் வரை, போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதனால், அவ்வழியாக செல்லும், நோயாளிகளை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைகளில் கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது. இந்த மேம்பாலம், போரூர் மக்களுக்கு மட்டுமின்றி, பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், எட்டு ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும்.-நடராஜன்போரூர் குடியிருப்போர் நலச்சங்கம் நிர்வாகி
போரூர் மேம்பால பணிகள் மீண்டும் துவங்க, இரண்டு முறை ஆர்ப்பாட்டம், அதிகாரிகளை சந்திப்பது என, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன். சட்டசபையில், 11 முறை போரூர் மேம்பாலம் குறித்து கேள்வி எழுப்பினேன். தற்போது, மேம்பாலம் பணிகள் முடிந்து திறக்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல், நொளம்பூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்க, எம்.ஜி.ஆர்., தோட்டம் அருகே மேம்பாலம் அமைப்பதாக, 2015ல், மறைந்த முதல்வர் ஜெ., அறிவித்திருந்தார். அவர் அறிவித்த திட்டத்தை, தற்போதைய அரசு நிறைவேற்ற வேண்டும்.-பீம்ராவ்
மதுரவாயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,