ஸ்டெம் செல் விழிப்புணர்வு தேவை!
டெக்னாலஜி
குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து பெறப்படும் ஸ்டெம்செல்களை சேமித்தல், சோதனை நடத்துதல் மற்றும் பாதுகாத்து வைப்பதற்கு உதவும் வகையில் சமூக ஸ்டெம்செல்வங்கித் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் இயக்குநரான மயூர் அபயாவிடம் இதுபற்றி பேசினோம்.‘‘குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு மருத்துவ சிகிச்சையின்போது தேவைப்படும் பொருத்தமான ஸ்டெம்செல்களை உடனடியாகவும், எளிதாகவும் பெறும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே பயன்பெறுவதோடு சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பலன் கிடைக்கும்.
இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பிரசவத்தின்போதும் குழந்தைகளின் தொப்புள் கொடியினை சேகரித்து, பாதுகாப்பதற்கான வசதிகள் நம்மிடையே இல்லை. முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஸ்டெம்செல்கள் கிடைக்கக்கூடும்.குழந்தைகளின் ஸ்டெம்செல்களைத் தானம் அளிப்பது குறித்து தற்போதுதான் பெற்றோர்களிடையே விழிப்புணர்வுஏற்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஸ்டெம்செல்லின் தேவைகள் மற்றும் அவசியம் குறித்த பார்வையை பொதுமக்களிடம் உண்டாக்க வேண்டும். அதற்குத் தேவையான, பாதுகாப்பதற்கான வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் உலக அளவில் அதிகமான ஸ்டெம்செல் வழங்கும் நாடாக இந்தியா மாறும். இது உலக அளவில் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள், குடும்பத்தினர், சமூகத்தினர் ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை பெறும் வாய்ப்பினையும் அதிகப்படுத்தும்’’ என்கிறார்.