அனில் கும்ப்ளே ராஜினாமா ஆச்சரியமானதல்ல; கேப்டன்தான் ஒரு சர்வதேச அணியை வழிநடத்த முடியும்: இயன் சாப்பல்
அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தது ஆச்சரியமல்ல என்றும், கேப்டன் தான் எந்த ஒரு சர்வதேச அணியையும் திறம்பட வழிநடத்த முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு இயன் சாப்பல் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
கும்ப்ளேவின் ராஜினாமா ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கும்ப்ளேயும் வலுவான மனநிலை படைத்தவர், இவருக்கும் கோலிக்கும் இடையேயான உறவுகளில் சரிவு ஏற்பட்டது கவனச்சிதறலை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றது. எனவே இந்தியாவின் எதிர்காலப் பயிற்சியாளர் குறித்த விவாதங்களில் கும்ப்ளேயின் குணாதிசியத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சர்வதேச கிரிக்கெட் அணியை கேப்டன் மட்டுமே வழிநடத்த முடியும். ஏனெனில் களத்தில்தான் ஏகப்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன, அங்கு பயிற்சியாளர் இருக்கப் போவதில்லை, கேப்டன் தான் கையாளப்போகிறார். இது தவிர களத்துக்கு வெளியேயும் நல்ல தலைமைத்துவம் தேவைப்படுகிறது, இதையெல்லாம் கேப்டனே கையாள முடியும் இதுதான் சகவீரர்களிடத்தில் கேப்டன் மீது மரியாதையை உருவாக்கும், எந்த ஒரு கேப்டனின் வெற்றிக்கும் இதுவே அடித்தளம்.
எனவேதான் கேப்டன் என்பவர் மனவலிமை படைத்த தனிநபராகவும் தீர்மானகரமான சிந்தனைப் போக்குடையவராகவும் இருப்பது அவசியம். அந்த இடத்தில் அதே மனவலிமை உள்ள ஒரு கண்டிப்பானவரை பயிற்சியாளராகப் போட்டு அவர் கேப்டனுக்கு அறிவுரை வழங்குமாறு செய்வது மோதலை வரவேற்கும் செயல் என்பதே என் கருத்து.
ஒரு கேப்டனின் சிறந்த ஆலோசகர்கள் அவரது துணை கேப்டன், தெளிவான சிந்தனையுடைய விக்கெட் கீப்பர், ஒன்று அல்லது 2 மூத்த வீரர்கள் ஆகியோர்களே. இவர்கள்தான் களத்தில் உள்ளனர், ஆட்டத்தின் போக்கை நன்கு அறியக்கூடியவர்கள். சரியான நேரத்தில் கேப்டனுக்கு என்ன அறிவுரை வழங்க வேண்டும் என்பது இவர்கள் சம்பந்தப்பட்டதே.
களத்துக்கு வெளியே கேப்டனுக்கு ஆலோசகராக ஒரு நல்ல மேலாளர் இருக்க முடியும். அதாவது போட்டிகளை வெற்றி பெறுவது குறித்த கவலைகளைச் சுமக்காத கடமைகளைச் செய்ய மேலாளராக ஒருவர் இருந்தால் நல்லது.
களத்தை விட்டு ஒரு கேப்டன் ஓய்வறைக்குத் திரும்பும் போது அங்கு ஒருவர் வேறொரு கருத்தை வைத்திருந்தால் அது கேப்டனுக்கு தேவையில்லாதது என்றே கருதுகிறேன். அதே போல்தான் ஆட்டத்துக்கு முந்தைய திட்டமிடுதலில் வலுவான இன்னொரு ஆலோசகர் அல்லது பயிற்சியாளரும் கேப்டனுக்குத் தேவையில்லை. நான் இப்போதெல்லாம் பார்ப்பது என்னவெனில் முதல்நாள் மாலை திட்டமிடுவதை செயல்படுத்தும் கேப்டன்சிகளையே. ஆனால் இது அணியின் வெற்றிக்கு இடையூறாக இருப்பது என்பதற்கான ஆதாரங்கள் போதுமான அளவுக்கு உள்ளன.
ஒரு கேப்டன் வேறொருவர் திட்டத்தைக் கேட்டு அதைச்செய்யும் நிலைமையில் இருந்தால் அந்தப் பொறுப்புக்கு ஒருவர் கேப்டனாக இருக்க தகுதியற்றவர் என்பதே என் துணிபு.
இந்திய அணி 2 திறமையான தலைமைகளை அணியில் கொண்டுள்ளது அதிர்ஷ்டமே, ஒன்று விராட் கோலி, இன்னொன்று அஜிங்கிய ரஹானே.
எனவே கோலியின் வேலை என்னவெனில் வெற்றிக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவது, வெளியே இருக்கும் உதவியாளர்கள் இந்த இலக்கிலிருந்து அவரது கவனத்தை திசைத் திருப்பாதவர்களாக இருப்பது அவசியம்.
இவ்வாறு எழுதியுள்ளார் இயன் சாப்பல்.