எதிர்காலம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு: தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் அறிவிப்பு
இந்த தலைமுறையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கும் 33 வயதான தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தற் போது கடும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள் ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இவரது தலைமையிலான அணி 1-2 என இழந்திருந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் சுற்றுடன் தென் ஆப்ரிக்க அணி வெளியேறிய நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரையும் இழந்துள்ளது. கடந்த சில மாதங்க ளாகவே டெஸ்ட் போட்டியை புறக்கணித்து குறுகிய வடிவிலான ஆட்டங்களில் மட்டும் டி வில்லி யர்ஸ் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தனது எதிர்கால கிரிக்கெட் திட்டம் குறித்து வரும் ஆகஸ்ட் மாதம் முடிவு செய்ய உள்ளதாக டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஆகஸ்ட் மாதம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்து பேசு வேன். அப்போது எனது எதிர் காலம் குறித்து முடிவு செய்வேன்.
எந்த ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்பதை நாங்கள் தேர்வு செய்ய முடியாது. ஆனால் அடுத்த இரு வருடங்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்த முடிவை எடுக்க முடியும். அடுத்த சில மாதங்கள் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க உள்ளேன். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேச தொடருக்கு நான் தயாராகி விடுவேன்.
அடுத்த உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகே நடைபெற உள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது முதன்மையான கனவு அல்லது வெல்லும் அணியில் ஏதாவது ஒரு வகையில் நானும் அங்கம் வகிக்க வேண்டும்” என்றார்