தங்கம் வென்றார் யாஷஸ்வினி
ஜெர்மனியில் ஐஎஸ்எஸ்எப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி சிங் தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
8 பேர் கலந்து கொண்ட இறுதி சுற்றில் அவர், 235.9 புள்ளிகள் சேர்த்து உலக சாதனையை சமன் செய்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார். கொரியாவின் வூரி கிம் 231.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இத்தாலி யின் ஜியுலியா கம்போதிரினி வெண்கலப் பதக்கம் வென்றார்.
யாஷஸ்வினியின் வெற்றி யால் பதக்க பட்டியலில் இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
இளைஞர் மற்றும் ஜூனியர் பிரிவில் யாஷஸ்வினி கடந்த 3 வருடங்களில் கலந்து கொள்ளும் 9-வது இறுதிப் போட்டி இதுவாகும். எனினும் தற்போது தான் அவர் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.
இந்த தொடரில் இந்திய வீரர் அனிஷ், 25 மீட்டர் ஸ்டான்டர்டு பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.