ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி பேசினேனா?- கவுதம் கார்த்திக் விளக்கம்
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அதற்கு நடிகர் கவுதம் கார்த்திக் விளக்கமளித்துள்ளார்.
கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘இவன் தந்திரன்’. ஜூன் 30-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது படக்குழு.
‘இவன் தந்திரன்’ படத்தினை திருச்சியில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கவுதம் கார்த்திக் பேசும் போது, “ரஜினி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் எப்போதுமே ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக இருக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இதற்கு ரஜினி ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கவே, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கவுதம் கார்த்திக். அந்த வீடியோ பதிவில் அவர் பேசியதாவது, “நான் சொன்ன கருத்தை தவறாக புரிந்து கொண்டார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்டார்கள்.
எனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. எனக்கு ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டார், அவரை நான் சூப்பர் ஸ்டாராகவே பார்க்க விரும்புகிறேன். அவ்வளவு தான் நான் சொன்னேன். அதை தவறாக புரிந்து கொண்டு வேற மாதிரி எழுதியுள்ளார்கள்.
எனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாது. படங்களில் நடிப்பதும், படங்கள் பார்ப்பதுமே எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று பேசியுள்ளார் கவுதம் கார்த்திக்
‘இவன் தந்திரன்’ படத்தைத் தொடர்ந்து ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இந்திரஜித்’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் கார்த்திக்.