லோதா கமிட்டி பரிந்துரைகளை ஆராய 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்தது
கிரிக்கெட் சீர்திருத்தம் குறித்து நீதிபதி லோதா கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை ஆராய ராஜீவ் சுக்லா தலைமையில் 7 உறுப்பினர்களை கொண்ட குழுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அமைத்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளை யாட்டை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் குழு அமைக்கப் பட்டிருந்தது. இந்த குழு அளித்த பரிந்துரைகளில், “70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐயில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரைகளைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் கடந்த திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்தின் இறுதியில் லோதா குழு அளித்துள்ள சில சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் பற்றி ஆராய்ந்து அவற்றை அமல் படுத்த குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி லோதா கமிட்டியின் பரிந் துரைகளை ஆராய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தற்போதைய தலைவரான ராஜீவ் சுக்லாவின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ நேற்று அமைத்தது.
இந்தக் குழுவில் ராஜீவ் சுக்லாவுடன் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவருமான சவுரவ் கங்குலி, கேரள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.சி.மேத்யூ, மேகாலயா கிரிக்கெட் சங்க செயலாளர் நாபா பட்டாசார்ஜி, குஜராத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜெய் ஷா (இவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன்), பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரி, பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளைக் கண்டறிந்து பிசிசிஐக்கும், உச்ச நீதிமன்றத் துக்கும் தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக 10-ம் தேதிக்குள் இந்தக் குழு அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பிறகு அதில் உள்ள விஷயங்களைப் பற்றி ஆராய பிசிசிஐயின் பொதுக்குழு கூடும் என்று அமிதாப் சவுத்ரி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.