காஷ்மீரில் 3 பிரிவினைவாத தலைவர்கள் கைது
தேசிய புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உள்ள நிலையில், காஷ்மீரில் 3 பிரிவினைவாதத் தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் தீவிரவாதச் செயல் களை ஊக்குவிக்க பிரிவினைவாதத் தலைவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து ஹவாலா பணம் வரு வதாகக் கூறப்பட்டது. இதுதொடர் பாக தேசிய புலனாய்வுக் குழு கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பிரிவினைவாதக் குழுக்களில் முக்கியமானவரான ஹுரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கிலானியின் மருமகன் அல்தாப் அகமது ஷா மற்றும் அயாஷ் அக்பர், மெஹ்ராஜுதின் கல்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக அவர்களை இன்று டெல்லிக்கு வருமாறு தேசிய புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி இருந்தது.
இதற்கிடையே முன்னதாக 3 பேரும் காஷ்மீர் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் ராஜ்பாக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.